மங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள சி.டி. போலியானது; முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி


மங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள சி.டி. போலியானது; முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2020 5:45 AM IST (Updated: 11 Jan 2020 11:52 PM IST)
t-max-icont-min-icon

மங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள சி.டி. போலியானது என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு தினத்தையொட்டி பெங்களூரு விதானசவுதாவில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மங்களூரு கலவரம் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அரசு மற்றும் போலீசார் மீது குற்றச்சாட்டுகள் கூறி இருப்பது குறித்தும், அதுதொடர்பான சி.டி.யை வெளியிட்டு இருப்பது குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்து முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

மங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்ட சி.டி. போலியானது. அந்த சி.டி.யில் இடம் பெற்றுள்ள வீடியோ காட்சிகளும் போலியானது. வீடியோ முழுமையாக இல்லை. வீடியோக்கள் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ விவகாரம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இந்த நாடு கண்ட முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். விவசாயிகள், ராணுவ வீரர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர்களின் வளர்ச்சிக்காக லால்பகதூர் சாஸ்திரி கடுமையாக உழைத்தார். விவசாயிகளுக்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி இருந்தார்.

லால்பகதூர் சாஸ்திரி காட்டிய வழியை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர். 1965-ம் ஆண்டு நம் நாடு மீது பாகிஸ்தான் போர் தொடுத்த போது, ராணுவ வீரர்களை முன்னெடுத்து சென்று வெற்றி கண்டவர். பிரபல கன்னட அறிஞர் சிதானந்தமூர்த்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சிதானந்தமூர்த்தியை கர்நாடக மேல்-சபை உறுப்பினராக்க நான் முயன்றேன். ஆனால் அவர் வயதாகி விட்ட காரணத்தால் மேல்-சபை உறுப்பினர் பதவியை ஏற்க விரும்பவில்ைல. சிதானந்தமூர்த்தியின் மரணம் கர்நாடகத்திற்கும், கன்னடத்திற்கும் பெரும் இழப்பாகும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story