சி.டி.யை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய தைரியம் இருக்கிறதா? பா.ஜனதாவினருக்கு டுவிட்டர் மூலம் குமாரசாமி பதிலடி
மங்களூரு கலவரம் தொடர்பாக நான் வெளியிட்டுள்ள சி.டி.யை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய பா.ஜனதாவினருக்கு தைரியம் இருக்கிறதா? என்று டுவிட்டர் மூலம் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நடந்த கலவரம் தொடர்பான வீடியோக்கள் அடங்கிய சி.டி.யை நேற்று முன்தினம் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டுள்ள சி.டி.க்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மங்களூருவில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த குமாரசாமி நினைப்பதாக பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி இருந்தனர்.
மேலும் முதல்-மந்திரி எடியூரப்பாவும், குமாரசாமி வெளியிட்ட சி.டி. போலியானது என்றும், அந்த வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில், சி.டி. விவகாரம் தொடர்பாக எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குமாரசாமி தனது டுவிட்டரில் தொடர்ந்து 12 பதிவுகள் செய்திருந்தார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-
மங்களூரு கலவரம் தொடர்பாக நான் வெளியிட்டுள்ள சி.டி.போலியானது என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். அந்த சி.டி. போலியானதா என்பதை நிரூபிக்க தயாரா?. நான் வெளியிட்டுள்ள சி.டி.யை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை பெறும் தைரியம் பா.ஜனதாவினருக்கு இருக் கிறதா?.
கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததாலும், இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததாலும் மங்களூரு கலவரம் தொடர்பான சி.டி.யை நான் வெளியிட்டு இருப்பதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். அப்படியே இருக்கட்டும். துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி இதற்கு முன்பு சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்திருந்தார். தற்போது எந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பதை தெரிவிக்க அஸ்வத் நாராயண் தயாரா?.
போலீசார் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அல்ல, அவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்துபவர்கள். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இருந்த போலீசார் தான், தற்போதும் பணியாற்றி வருகிறார்கள். எனது தலைமையிலான அரசு வேறு, தற்போது பா.ஜனதா தலைமையில் நடந்து வரும் அரசு வேறு. எனது ஆட்சியிலும் இதே போலீசார் தான் இருந்தார்கள்.
அப்போது கலவரம் நடைபெறவில்லை. தற்போது யார் ஆட்சியில் கலவரம் நடந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும். கலவரத்தில் 2 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்?. போலீசாரை பயன்படுத்தி கலவரத்தை இந்த அரசு உருவாக்கி உள்ளது.
மங்களூரு கலவரத்தை வைத்து நான் அரசியல் செய்வதாகவும், அதை செய்ய வேண்டாம் என்றும் சகோதரி ஷோபா எம்.பி. கூறி இருக்கிறார். நான் சட்டசபை ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவராக உள்ளேன். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அரசியல் பற்றி பேசுவதற்கு தடை ஏதும் இருக்கிறதா?.
மங்களூருவில் நான் அரசியல் செய்வேன். மங்களூருவை வைத்து நான் அரசியல் செய்யவில்லை. நீங்கள் தான் அரசியல் செய்கிறீர்கள். ெதாழில் நகரமாக இருந்த மங்களூருவை வைத்து மத அரசியல் செய்வது பா.ஜனதா தான்.
இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story