கவர்னரிடம் தரத்தை எதிர்பார்க்க முடியவில்லை - நாராயணசாமி பேச்சு
கவர்னரிடம் தரத்தை எதிர்பார்க்க முடியவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் இயங்கிவரும் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா நடைபெற்றது.
இதையொட்டி பொன்விழா மலரை, முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். இதே நிகழ்ச்சியில் கடந்த டிசம்பர் மாதம் சூடான் நாட்டு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த காரைக்கால் திருநள்ளாறை சேர்ந்த இளைஞர் வெங்கடாசலம் குடும்பத்திற்கு, முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை நாராயணசாமி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
உயர்கல்வியில் அகில இந்திய அளவில் புதுச்சேரி மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது புதுச்சேரி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94 சதவீதமும், 10-ம் வகுப்புத் தேர்வில் 93 சதவீதமும் வெற்றிபெற்றுள்ளது.
அகில இந்திய அளவில் 780 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் புதுச்சேரி பொறியியல் கல்லூரி 100-வது இடத்தில் உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் பள்ளிகள் தூய்மையில் புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகள் 7 விருதுகள் பெற்றுள்ளன. யூனியன் பிரதேசங்களிலேயே புதுச்சேரிக்கு சிறந்த இடம் கிடைத்துள்ளது. கல்வித்துறை மேம்பாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்படுகிறது.
புதுச்சேரி மாநில மக்களுக்கு நிறைய திட்டங்களை கொண்டு வர வேண்டும். வளர்ச்சி, வருமானம் நோக்கி செயல்பட வேண்டும் என அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். கூட்டுறவு நிறுவனங்களைப் பொறுத்தவரை பல மாற்றங்களை செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. அதற்கு அமைச்சர் கந்தசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளில் முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, சென்டாக் பணம் காலத்தோடு வழங்கப்படுகிறது. இலவச அரிசிக்கு ரூ. 180 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு பணமாக கொடுக்க வேண்டும் என்றார். அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளோம்.
கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசின் உதவி ஏதுமின்றி புதுச்சேரி முன்னேறி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியின் தினசரி தொந்தரவுகளை மீறி, அரசு சிறப்பாக செயல்படுகிறது. அவரிடம் தரத்தை எதிர்பார்க்க முடியவில்லை. போராடித்தான் வெற்றிபெறுகிறோம். எல்லா நிலைகளிலும் மக்களின் ஆதரவு புதுச்சேரி அரசுக்கு உள்ளது. யூனியன் பிரதேசங்களில் சிறந்த பகுதியாக புதுச்சேரிக்கு மத்திய அரசு அண்மையில் விருது வழங்கியது. இந்த விருதுக்கு தலைமை செயலர் தான் பொறுப்பு. அவர்தான் விருதை வாங்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியிருக்கிறார். அப்படியென்றால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவர்னர் டம்மியாக்க பார்க்கிறாரா?, பொறுப்பில் இருக்கிறவர்கள் தரமாக பேச வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன், அமைச்சர் கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி.,சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, கல்வித்துறை அதிகாரி அல்லி, மேல்நிலைக்கல்வி இயக்குனர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, பள்ளி துணை முதல்வர் மைதிலி வரவேற்றார். முடிவில், முன்னாள் மாணவர் ராவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story