திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வு


திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-12T00:50:42+05:30)

திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த மாதம் 27, 30-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ந் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திருச்சி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவியில் மொத்தம் 24-ல் தி.மு.க. 18 இடங்களையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தையும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றதால் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியும் தி.மு.க.வுக்கு கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெளிவாக தெரிந்திருந்தது. அ.தி.மு.க. 5 இடங்களை மட்டுமே ெவற்றி பெற்றிருந்ததால் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவியை கைப்பற்ற முடியாத நிலைக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. மாவட்ட கவுன்சிலர்களில் வென்ற தி.மு.க. உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர் மட்டும் வந்திருந்தனர்.

போட்டியின்றி தேர்வு

மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கவுன்சிலர்களை தவிர வெளியாட்கள் யாரையும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.

மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சிவராசுவிடம் தி.மு.க. வேட்பாளர் த.ராஜேந்திரன் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேறுநபர்கள் யாரும் போட்டியிடவில்லை. இதனால் திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவராக த.ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக கலெக்டர் சிவராசு அறிவித்தார். அப்போது கலெக்டர் பேசுகையில், ‘வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாவட்ட நிர்வாகத்துடன் முழு ஒத்துழைப்பு நல்கி அனைவரும் மக்கள் பணியாற்ற கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

புறக்கணிப்பு

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் தேர்தலில் பங்கேற்க வராமல் புறக்கணித்தனர். மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட த.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சியில் 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவரது சொந்த ஊர் துறையூர் அருகே உள்ள வீரமச்சான்பட்டி கிராமம் ஆகும்.

இவர் தி.மு.க. வடக்கு மாவட்ட பொருளாளராக கட்சியில் பதவி வகித்து வருகிறார்.

த.ராஜேந்திரனை தர்மன் ராஜேந்திரன் என கட்சியினர் மற்றும் அவரது சொந்த ஊரில் அழைப்பது உண்டு. மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருச்சி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் நேர்மையாக மக்கள் பணியாற்றுவோம். சாலை வசதி, குடிநீர், தெருவிளக்குகள் அமைப்பதில் முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றார்.

துணை தலைவர்

இதேபோல மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று மாலை 3.30 மணிக்கு நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சியில் 16-வது வார்டு கவுன்சிலரும், தி.மு.க. வேட்பாளருமான கருணாநிதி வேட்பு மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இந்த தேர்தலிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், துணை தலைவராக கருணாநிதி வெற்றி பெற்றதாக கலெக்டர் சிவராசு அறிவித்தார். இவர் திருவெறும்பூரை சேர்ந்தவர் ஆவார். மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்ததை வீடியோவில் தேர்தல் அதிகாரிகள் பதிவு செய்தனர். வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணை தலைவருக்கு கலெக்டர் சிவராசு மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story