பெற்ற தாயை கத்தியால் குத்திக்கொன்ற மகன் - தடுக்க முயன்ற தந்தையையும் குத்தினார்
பெற்ற தாயை கத்தியால் குத்திக்கொலை செய்த மகன், அதை தடுக்க முயன்ற தந்தையையும் கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திரு.வி.க. நகர்,
சென்னை முகப்பேர் காளமேகம் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு (வயது 67). இவர், தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (65). இவர்களுக்கு வரதராஜுலு (37) மற்றும் வீரராகவன் (35) என 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களில் வரதராஜுலு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். வீரராகவன், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர், அவ்வப்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று இரவு வீரராகவனை மீண்டும் சிகிச்சைக்காக மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது குறித்து அவரிடம் ஜெயலட்சுமி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரராகவன், வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது தாயின் கழுத்தில் வைத்து, தன்னை மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப கூடாது என்று மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராமுலு மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவை திறக்கும்படி கூறினர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
இதனால் வீரராகவன், தனது கையில் இருந்த கத்தியால் பெற்ற தாய் என்றும் பாராமல் ஜெயலட்சுமியின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த தந்தை ஸ்ரீராமுலுவின் தலையிலும் கத்தியால் குத்தினார்.
சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் வந்த மருத்துவ உதவியாளர், ஜெயலட்சுமியை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஸ்ரீராமுலு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையான ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வீரராகவனிடம் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story