ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: அ.தி.மு.க.-3, பா.ம.க.-2, தி.மு.க.-1 இடங்களில் வெற்றி மாவட்ட ஊராட்சி தலைவராக சந்திரசேகா் தேர்வு


ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: அ.தி.மு.க.-3, பா.ம.க.-2, தி.மு.க.-1 இடங்களில் வெற்றி மாவட்ட ஊராட்சி தலைவராக சந்திரசேகா் தேர்வு
x
தினத்தந்தி 12 Jan 2020 4:30 AM IST (Updated: 12 Jan 2020 1:18 AM IST)
t-max-icont-min-icon

ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.-3, பா.ம.க.-2, தி.மு.க.-1 இடங்களில் வெற்றி பெற்றன. மாவட்ட ஊராட்சி தலைவராக சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கலெக்டர் ரத்னா சான்றிதழ் வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற துணை தலைவர் தேர்தலில் அரியலூர் மாவட்ட கவுன்சில் துணை தலைவராக பா.ம.க.வை சேர்ந்த அசோகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய 6 ஒன்றியங்கள் உள்ளன. இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலையடுத்து, ஒன்றியக்குழு தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அரியலூர் ஒன்றியத்தில் உள்ள 17 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களை கைப்பற்றிய நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டிமடம்

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலரும், ஆண்டிமடம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான மருதமுத்துவும், தி.மு.க. சார்பில் 8-வது வார்டு கவுன்சிலர் ஜோதியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் அ.தி.மு.க.-5, பா.ம.க.-3, தி.மு.க.-6, சுயேச்சைகள்-5 என மொத்தம் 19 கவுன்சிலர்கள் மறைமுக வாக்கு செலுத்தினர். இதில் மருதமுத்து 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மருதமுத்துவிற்கு தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார். இந்த தேர்தலில் ஒரு வாக்கு செல்லாத வாக்காகும். இதையடுத்து ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த மருதமுத்துவிற்கு காத்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து வாழ்த்து கோ‌‌ஷம் எழுப்பினர்.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் அருள்தாஸ் என்பவரும், அ.தி.மு.க. சார்பில் அரியலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் ரவிசங்கர் என்பவரும் போட்டியிட்டனர். இதில் நடந்து முடிந்த தேர்தலில் ஒன்றிய குழு தலைவராக ரவிசங்கர் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., நகர செயலாளர் பி.ஆர்.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், பா.ம.க. மாநில பொது செயலாளர் திருமாவளவன் உள்பட பலர் உடனிருந்தனர்.

தா.பழூர், செந்துறை, திருமானூர்

தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செந்துறை ஒன்றியத்தில் உள்ள 19 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தலைவர் தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த தேன்மொழி சாமிதுரை 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 21 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த சுமதி 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஒன்றியக்குழு துணை தலைவர்கள்

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ஒன்றியக்குழு துணை தலைவராக தே.மு.தி.க.வை சேர்ந்த சரஸ்வதியும், செந்துறை ஒன்றியக்குழு துணை தலைவராக அ.ம.மு.க.வை சேர்ந்த மணிவேலனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருமானூர் ஒன்றியக்குழு துணை தலைவராக அம்பிகா வெற்றி பெற்றார். இவர் வடுகபாளையம் ஒன்றியக்குழு உறுப்பினருக்கு சுயேச்சையாக நின்று வெற்றிப்பெற்று, அ.தி.மு.க. ஆதரவாளராக உள்ளார். தா.பழூர் ஒன்றியக்குழு துணை தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு துணை தலைவராக லதாகண்ணன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ம.க.வை சேர்ந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டிமடம் ஒன்றியக்குழு துணை தலைவராக பா.ம.க.வை சேர்ந்த தேன்மொழி என்பவர் தேர்ந் தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சான்றிதழ்களை வழங்கினர். அதேபோல் கிராம வார்டு உறுப்பினர்களுக்கான துணை தலைவர் பதவிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு கிராம ஊராட்சி தலைவர்கள் சான்றிதழ்களை வழங்கினர்.

Next Story