தனிப்படை தேடிய தமிழக இளம்பெண், போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்; தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார்


தனிப்படை தேடிய தமிழக இளம்பெண், போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்; தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார்
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 7:48 PM GMT)

‘சுதந்திர காஷ்மீர்’ என்ற பதாகையை கையில் ஏந்தி இருந்ததால் சர்ச்சையில் சிக்கிய தமிழக இளம்பெண்ணை தனிப்படை போலீசார் தேடிய நிலையில் நேற்று அவர் மைசூரு ஜெயலட்சுமி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார்.

மைசூரு, 

புதுடெல்லியில் இருக்கும் ஜவகர்லால் நேரு(ஜே.என்.யூ.) பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள், சிலர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் மாணவிகள் காயம் அடைந்தனர். இதை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைசூருவில், மாணவ-மாணவிகள் மற்றும் தலித் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடந்தது.

இதில் நளினி என்ற இளம்பெண் கலந்து கொண்டு ‘சுதந்திர காஷ்மீர்’ பதாகையை கையில் ஏந்தி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுபற்றி மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நளினியை தீவிரமாக தேடிவந்தனர். நளினி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால், மைசூரு தனிப்படை போலீசார் தமிழ்நாட்டுக்கு சென்றனர். அங்கு முகாமிட்டு நளினியை தேடிவந்தனர். இந்த நிலையில் இளம்பெண் நளினி மைசூரு ஜெயலட்சுமி போலீஸ் நிலையத்தில் தனது பெற்றோருடன் வந்து ஆஜரானார்.

அப்போது அவர் தன் மீதான வழக்கில் இருந்து கோர்ட்டில் ஜாமீன் பெற்றிருப்பதையும், அதற்கான ஆவணங்களையும் போலீசாரிடம் சமர்ப்பித்தார். பின்னர் அவரிடம், மைசூரு மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சிவக்குமார் விசாரணை நடத்தினார்.

அந்த சந்தர்ப்பத்தில் நளினி போலீசாரிடம் தான் போராட்டத்தில் பங்கேற்றதற்கும், ‘சுதந்திர காஷ்மீர்’ என்று பதாகையை கையில் ஏந்தி இருந்ததற்கும், தன் மீதான குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளித்தார். நீண்ட விசாரணைக்கு பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நளினி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான்(நளினி) அந்த போராட்டத்தில் விருப்பப்பட்டு கலந்து கொண்டேன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 370-வது சட்ட விதியை அமல்படுத்தியதில் இருந்து அங்கு இணையதள சேவை உள்பட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

அதனால் அங்கு இருக்கும் உறவினர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக காஷ்மீருக்கு இணையதள வசதிகளை வழங்க வேண்டுமென்று கோரி ‘சுதந்திர காஷ்மீர்’ என்ற பதாகையை கையில் ஏந்தி இருந்தேன்.

மத்திய, மாநில அரசுகள் மீது எனக்கு விரோதம் இல்லை. மேலும் நாட்டில் வன்முறையை தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. அதை கருத்தில் கொண்டு நான் செய்யவில்லை. நானும் இந்திய மண்ணில் பிறந்தவள்தான்.

இந்தியா மீது எனக்கும் பற்றுள்ளது. இது சம்பந்தமாக நான் போலீசாரின் எந்த விசாரணைக்கும் தயார் நிலையில் உள்ளேன். ஜம்மு-காஷ்மீருக்கு இணையதள சேவையை கொடுங்கள் என்று கோரி தான் ‘சுதந்திர காஷ்மீர்’ என்ற பதாகையை நான் கையில் வைத்திருந்தேன். இதுதவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

போலீசாரின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நளினி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி இருப்பது குறித்து அறிந்த மாணவ-மாணவிகள், தலித் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். அவர்கள் நளினியை விடுதலை செய்ய வேண்டும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் தலித் சங்க தலைவர் மரிதேவய்யாவை விடுவிக்க வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் மீண்டும் போலீசார் நளினியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி அவர் கூறிய தகவல்களை பதிவு செய்து கொண்டனர். சுமார் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு போலீசார் நளினியை திணறடித்ததாக கூறப்படுகிறது.

Next Story