கலெக்டர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம்: விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - துரை.ரவிக்குமார் எம்.பி. பேச்சு


கலெக்டர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம்: விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - துரை.ரவிக்குமார் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 8:01 PM GMT)

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று துரை.ரவிக்குமார் எம்.பி. பேசினார்.

விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் எல்லைகள் வரையறை செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மஸ்தான், சீத்தாபதி சொக்கலிங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரத்தில் மணலூர்பேட்டை பேரூராட்சி உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை.

எனவே மணலூர்பேட்டையில் இருந்து 5 கி.மீ., 10 கி.மீ. தொலைவிற்குள் உள்ள கிராமங்களையும், திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 5 கி.மீ. தொலைவிற்குள் உள்ள கிராமங்களையும் ஒருங்கிணைத்து மணலூர்பேட்டையை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்.

டி.கொடியூர், டி.குண்ணத்தூர், வீரணாம்பட்டு ஆகிய கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஏனெனில் இந்த 3 கிராமங்களில் இருந்து விழுப்புரத்திற்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரைதான் உள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சிக்கு செல்ல 80 கி.மீ. தூரம் உள்ளது. எனவே இந்த 3 கிராமங்களையும் விழுப்புரம் மாவட்டத்திலேயே சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. கூறுகையில், செஞ்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகள் உள்ளன. எனவே இதனை இரண்டாக பிரித்து ஆலம்பூண்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும், அதுபோல் மேல்மலையனூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன. இதனை இரண்டாக பிரித்து வளத்தியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்றார்.

சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. கூறுகையில், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஓமந்தூர், மொளசூர் ஆகிய 2 ஊராட்சிகளும் சேர்ந்து மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 15-ல் ஒன்றியக்குழு தொகுதியாக தற்போது உள்ளது. வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு எண் 18-ல் ஓமந்தூர், மொளசூர் ஆகிய 2 ஊராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதை ஆட்சேபனை செய்கிறோம். இந்த 2 ஊராட்சிகளையும் ஏற்கனவே இருந்ததைப்போல மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு எண் 7-ல் சேர்க்க வேண்டும் என்றார்.

துரை.ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். விழுப்புரம் நகராட்சி தற்போது நூற்றாண்டை தொட்டுள்ளது. இந்த நூற்றாண்டிலேயே இதனை மாநகராட்சியாக அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும். நகராட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே இதனை அறிவித்தால் வார்டு மறுசீரமைப்பு பணியை முடிக்கவும் ஏதுவாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் நமது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் இதை சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில் போதுமான வளர்ச்சி பணிகள் செய்யப்படவில்லை. எனவே குயிலாப்பாளையம் போன்ற ஊராட்சிகளை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இந்த கருத்துகளை மாவட்ட கலெக்டர்கள் அண்ணாதுரை, கிரண்குராலா ஆகியோர் கேட்டறிந்ததோடு அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் பெற்றனர். அதனை தொடர்ந்து கலெக்டர்கள் அண்ணாதுரை, கிரண்குரா லா ஆகியோர் பேசுகையில், வருவாய் எல்லைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் ஊராட்சி எல்லைகளை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. ஒரு சில கிராமங்களில் மட்டும் எல்லைகள் மாற்றம் செய்வது தொடர்பாகவும், புதிய ஊராட்சி உருவாக்குதல் தொடர்பாகவும் உத்தேசித்துள்ளோம். அதற்கான முதல் கருத்துக்கேட்பு கூட்டம்தான் இது. ஏற்கனவே மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துதான் வருவாய் எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உங்களின் கருத்துக்களை கேட்டு பதிவு செய்து வைத்துள்ளோம். அடுத்து 2-ம் கட்டமாக இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கருத்துக்கள் கேட்கப்படும். இதன் அடிப்படையில் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

Next Story