அவினாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது


அவினாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 11 Jan 2020 10:52 PM GMT (Updated: 11 Jan 2020 10:52 PM GMT)

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பத்மநந்தினியின் கணவரும் 14-வது வார்டு கவுன்சிலருமான ஏ.ஜெகதீசனும், தி.மு.க. சார்பில் சத்யபாமா அவினாசியப்பனும் போட்டியிட்டனர். இதையடுத்து தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அதிகாரி அரிகரன் முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 19 வார்டு கவுன்சிலர்களும் வாக்களித்தார்.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஏ.ஜெகதீசன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சத்யபாமா அவினாசியப்பன் 7 வாக்குகள் பெற்றார்.

இதை தொடர்ந்து ஏ.ஜெகதீசன் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அரிகரன் அறிவித்தார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன் கூடியிருந்த திரளான அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து தலைவர் ஏ.ஜெகதீசனுக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் மாலையில் நடந்த ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கு 9-வது வார்டு தே.மு.தி.க. கவுன்சிலர் பிரசாத்குமார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Next Story