குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்: பாகிஸ்தான் மொழியில் பேசும் காங்கிரஸ் - மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் காங்கிரஸ் பாகிஸ்தான் மொழியில் பேசுவதாக மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு,
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி ராய்ச்சூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாகிஸ்தானில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை 22 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்துவிட்டது. அண்டை நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அதுபற்றி காங்கிரஸ் பேச மறுக்கிறது. காங்கிரஸ் கட்சியினர், இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையின மக்களிடம் தவறான தகவல்களை கூறி திசை திருப்புகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தால் யாருக்கு என்ன தொந்தரவு ஏற்பட்டுள்ளது என்பதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் கூற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள். பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு ெதரிவித்து, நாட்டுக்கு எதிராக போராடுகிறார்கள். பாகிஸ்தான் மொழியும், காங்கிரஸ் மொழியும் ஒன்றாகிவிட்டது ஏன்?. பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை உலக நாடுகளிடம் காட்டும் பணியை நாங்கள் வெற்றிகரமாக செய்துள்ளோம்.
பாகிஸ்தானை தோலுரிக்க கிடைத்துள்ள வாய்ப்பை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?. பாகிஸ்தான் எந்த சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை.
உங்களால் (காங்கிரஸ்) செய்ய முடியாததை மற்றவர்கள் செய்ய முயற்சி செய்யும்போது எதிர்ப்பது ஏன்?. மங்களூரு வன்முறை சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வீடியோ காட்சிகள் அடங்கிய சி.டி.யை வெளியிட்டுள்ளார். இதற்கு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
குமாரசாமி எப்போதும், ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிடுவது (ஹிட் அன்டு ரன்) போல் பேசக்கூடியவர். நிலைமைக்கு ஏற்றவாறு போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். போலீசார் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக செயல்படுவது சரியல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வருகிற பட்ஜெட் மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.
Related Tags :
Next Story