கபாலிபெட்டாவில் இயேசு சிலை அமைக்க எதிர்ப்பு: கனகபுராவில் அமைதியை சீர்குலைக்க முயற்சி - பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மீது டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கபாலிபெட்டாவில் இயேசு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கனகபுராவில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் அவர்கள் அங்கு அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள கபாலிபெட்டா என்ற இடத்தில் உலகிலேயே மிக உயரமான இயேசு கிறிஸ்து சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த சிைல அமையும் நிலத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் வழங்கியுள்ளார். அது அரசு நிலம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே இயேசு கிறிஸ்து சிலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இயேசு சிலை அமைக்கப்படுவதை கண்டித்து இந்து அமைப்பினர் இன்று (திங்கட்கிழமை) கனகபுராவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து டி.கே.சிவக்குமார் வீடியோ மூலம் கனகபுரா மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
கபாலிபெட்டாவில் 400 ஆண்டுகளாக கிறிஸ்தவ மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதனால் அங்கு அவர்கள் தேவாலயம் கட்ட இடம் பெற்று தந்தேன். இதேபோல் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுக்கும் கல்வி உள்பட பல்வேறு வசதிகள் கிடைக்க உதவி செய்துள்ளேன். கனகபுராவின் வளர்ச்சியை கண்டு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
அதனால் கனகபுராவில் அமைதியை சீர்குலைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். கனகபுரா மக்கள் அமைதி காக்க வேண்டும். பிரச்சினையை தூண்டினாலும் பொறுமையை இழக்க வேண்டாம்.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story