மனித சமூகத்திற்கு சுவாமி விவேகானந்தர் ஒரு உந்துசக்தி - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


மனித சமூகத்திற்கு சுவாமி விவேகானந்தர் ஒரு உந்துசக்தி - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2020 11:15 PM GMT (Updated: 12 Jan 2020 6:30 PM GMT)

மனித சமூகத்திற்கு சுவாமி விவேகானந்தர் ஒரு உந்துசக்தி ஆவார் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் உயர் கல்வித்துறை சார்பில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா பெங்களூரு கன்டீரவா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்தும், கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கியும் பேசியதாவது:-

வீர சன்னியாசி சுவாமி விவேகானந்தர் மனித சமூகத்திற்கு ஒரு உந்துசக்தி. பலமான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் இளைஞர்கள் மற்றும் கல்வி மீது அதிக ஆர்வம் காட்டினார். இளைஞர்கள் பலம் வாய்ந்தவர்களாக மாற வேண்டும் என அவர் விரும்பினார். வாழ்க்கையில் பண்பு, கல்வி ஆகியவை மிக முக்கிய பங்காற்றுகிறது. சுவாமி விவேகானந்தரின் வழியில் தியாகம், நாட்டுப்பற்று, சேவை மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை இளைஞர்கள் பின்பற்றினால் மற்ற பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடும்.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு அவர் எழுதிய கட்டுரைகள் வழிகாட்டியாக அமைந்தன. இளைஞர்கள் நவீன தொழில்நுட்பத்தில் சிக்கி நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை மறந்து வருகிறார்கள். விவேகானந்தரின் கொள்கைகளை நமது இளைஞர்கள் பின்பற்றி நாட்டை கட்டமைப்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் சாதகமான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும்.

இளைஞர்கள் அதிகாரமளிப்பு மையங்கள் தொடங்குதல் மற்றும் தொழிற்பயிற்சி வழங்குதல், விளையாட்டுகளுக்கு ஊக்கம் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு மாநில அரசு பரிசு வழங்கி கவுரவிக்கிறது.

தவறான தகவல்களின் அடிப்படையில் இன்றைய இளைஞர்கள் வெளிநாடுகளில் போய் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதன்மூலம் நமது கலாசாரம் மற்றும் மதத்தை மறந்துவிடுகிறார்கள். இளைஞர்கள் இத்தகைய மனநிலையை கைவிட்டு, இங்கேயே இருந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்புவதை புனித பயணமாக கருத வேண்டும். நமது மத நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

எனது குடும்பத்திற்காக நான் பள்ளி நாட்களில் காய்கறிகள் மற்றும் எலுமிச்சை பழங்களை விற்று பணம் சம்பாதித்தேன். ஆனால் இன்று 6 கோடி கன்னடர்களின் ஆதரவை பெற்று 4-வது முறையாக முதல்-மந்திரியாக உங்கள் முன் நிற்கிறேன். உன்னத தலைவர்களின் கொள்கைகளை பின்பற்றியதால் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். ஜனநாயகத்தில் முடியாது என்று எதுவுமில்லை. மாணவர்கள் தங்கள் பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும். படிக்க வேண்டும். தங்களின் குடும்பத்தை பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி விவேகானந்தரின் படத்திற்கு எடியூரப்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டிகிரி கல்லூரியில் படிக்கும் முதலாண்டு மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு ரூ.300 கோடி செலவில் இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

Next Story