தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாகும் தமிழகம் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு


தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாகும் தமிழகம் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 7:28 PM GMT)

தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தேர்தல் மற்றும் அறிவிப்பு கூட்டம் அரியலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. தீவிரவாதிகளால் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்படவில்லை. இதுகுறித்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக கட்சியினர் அரசியல் செய்கின்றனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளோடு தீவிரவாதிகள் கூட்டணி வைத்துள்ளனர். இது குறித்து தி.மு.க. விளக்கம் அளிக்க வேண்டும்.

தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரம்

கேரளா, குஜராத், புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக உள்ளது. நான் மந்திரியாக இருந்தபோது உள்ளாட்சி களுக்கு ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசின் நிதி விரைவில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story