வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர வந்த ஆந்திர பெண் டாக்டரின் ஆய்வறிக்கை இருந்த மடிக்கணினி திருட்டு


வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர வந்த ஆந்திர பெண் டாக்டரின் ஆய்வறிக்கை இருந்த மடிக்கணினி திருட்டு
x
தினத்தந்தி 12 Jan 2020 10:30 PM GMT (Updated: 12 Jan 2020 8:10 PM GMT)

அருணாசலேஸ்வரர் கோவில் அருகே ஆந்திர பெண் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினியை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அதில் முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை அவர் தயார் செய்து வைத்திருந்ததால் பெண் டாக்டர் அதிர்ச்சியடைந்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்களிடம் கோவில் அருகில் வாகனங்களை நிறுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆந்திராவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் கோவிலுக்கு வந்து உள்ளனர். அவர்கள் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் தங்களின் காரை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் சென்று உள்ளனர். கோவிலை சுற்றி எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் பூட்டியிருந்த காரின் ஒருபுறம் உள்ள பின்பக்க கதவின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த மடிக்கணினியை திருடிச் சென்று உள்ளனர்.

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய குடும்பத்தினர் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததையும் உள்ளே வைத்திருந்த மடிக்கணினியும் திருடிப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த குடும்பத்தில் வந்த ஒரு பெண் டாக்டர் ஆஸ்திரேலியாவில் மருத்துவப்படிப்பு படித்து விட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்வதற்காக முக்கியமான ஆய்வறிக்கை தயார் செய்து மடிக்கணினியில் வைத்திருந்ததார். இதனால் மனமுடைந்த அந்த பெண் டாக்டர் கண்ணீர் விட்டு அழுதார்.

தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமிரா உள்ளது என்றும், மடிக்கணினியை யார் திருடியது என்று கண்டுபிடித்து விடலாம் என்று கூறினர். பின்னர் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்வதற்காக கோவிலின் நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் அந்த கண்காணிப்பு கேமரா பல நாட்களாக செயல்படாத நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதனால் அந்த பகுதியில் வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story