நைஜீரிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி 5 நாள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்தோம் - சென்னை திரும்பிய கப்பல் என்ஜினீயர் பேட்டி


நைஜீரிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி 5 நாள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்தோம் - சென்னை திரும்பிய கப்பல் என்ஜினீயர் பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2020 4:30 AM IST (Updated: 13 Jan 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

நைஜீரிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி 5 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்ததாக சென்னை திரும்பிய கப்பல் என்ஜினீயர் தெரிவித்தார்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த தாம்பரம் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் வருண்ராஜ் (வயது 29). கப்பல் என்ஜினீயரான இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்ற ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார்.

அங்கிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் நைஜீரியா நாட்டுக்கு சென்றார். அங்குள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2-ந் தேதி தனியார் கப்பலில் வருண்ராஜ், ரஷியாவைச் சேர்ந்த 2 என்ஜினீயர்களுடன் நைஜீரியாவில் கடலில் ரமோஸ் என்ற பகுதிக்கு சென்றார்.

இவர்கள் சென்ற கப்பலை நைஜீரியா நாட்டு கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்தனர். இவர்களிடம் பணம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டு தொல்லைப்படுத்தினர். நைஜீரியா நாட்டு கடற்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி, வருண்ராஜ் உள்பட 3 பேரையும் கடந்த 8-ந் தேதி மீட்டனர்.

நைஜீரியாவில் மருத்துவ பரிசோதனை முடித்துக்கொண்டு வருண்ராஜ், விமானம் மூலம் டெல்லி வந்தார். அங்கிருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் வருண்ராஜை அவருடைய தந்தை ஆனந்தன், தாய் செல்லகுமாரி ஆகியோர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.

பின்னர் வருண்ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2-ந் தேதி கப்பலை இயக்கக்கூடிய ரமோஸ் கடல் பகுதியில் சென்றபோது நைஜீரிய கடற்கொள்ளையர்கள் எங்களை சுற்றி வளைத்தனர். அங்குவந்த நைஜீரியா கடற்படையினர் சுதாரிக்கும் முன்பாக கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட தொடங்கிவிட்டனர்.

இதில் நைஜீரியா நாட்டு கடற்படை வீரர்கள் 4 பேர் இறந்துவிட்டனர். மீதமிருந்த 2 வீரர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். பின்னர் கடற்கொள்ளையர்கள், வெளிநாட்டைச் சேர்ந்த எங்கள் 3 பேரையும் கப்பலில் இருந்த சிறிய படகில் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த படகில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் துடுப்பு போட்டு சென்றோம். 5 நாள் படகில் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்தோம். 6-வது நாள் ஒரு கப்பல் அருகில் சென்றோம். அந்த கப்பலில் இருந்த மீனவர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்தோம். மீனவர்கள் எங்களை அழைத்துச் செல்லும்போது நைஜீரியா கடற்படையினர் மீண்டும் வந்து கடற்கொள்ளையர்களிடம் சண்டை போட்டனர்.

ஆனால் படகில் நாங்கள் இருந்ததால் கடற்படையினர் திரும்பிச் சென்றனர். பின்னர் எங்களை கடல் பகுதியில் இருந்து காட்டுக்கு கொள்ளையர்கள் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் நைஜீரியா கடற்படையினருக்கும், கடற்கொள்ளையர்களுக்கும் மீண்டும் 4 மணிநேரம் சண்டை நடைபெற்றது. அப்போது நாங்கள், அங்கிருந்து தப்பி காட்டில் இருந்த ஊர் மக்கள் உதவியுடன் நைஜீரியா கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டோம்.

கடற் கொள்ளையர்கள், இதுபோல் கப்பலில் செல்பவர்களை கடத்திச் சென்று மாதக்கணக்கில் அடைத்து வைத்து பணம் கேட்டு பேரம் பேசுவார்கள். ஆனால் 4 வீரர்கள் இறந்ததால் நைஜீரியா கடற்படை அதிரடியாக செயல்பட்டது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மூலமாக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் பிரதமர் மோடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வெளியுறவு துறை மூலமாக தூதரக அதிகாரிகள் என்னை மீட்டனர். இவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறோம். இவர்களின் உதவி இல்லை என்றால் 6 நாளில் நான் வந்திருக்க முடியாது. நடுக்கடலில் தொலைந்துபோய் இருப்பேன்.

என்னை கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்க உதவிய பிரதமர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story