தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரம்


தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 12 Jan 2020 10:00 PM GMT (Updated: 12 Jan 2020 8:26 PM GMT)

தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி, 

பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகையாக விளங்கி வருகிறது. அன்றைய தினம் மக்கள் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள்குலை, பனங்கிழங்கு உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதே போன்று புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு பெண் வீட்டு சார்பில் பொங்கல்படி கொடுப்பதும் மரபாக உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பொங்கல்படி கொடுப்பதற்காக ஏராளமானவர்கள் வாழைத்தார், கரும்பு, மஞ்சள் குலைகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். அவர்கள் கார்களிலும், வேன்களிலும் பொங்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதாலும், நேற்று விடுமுறை நாள் என்பதாலும் தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. தூத்துக்குடிக்கு தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு கட்டு கரும்பு ரூ.350 முதல் ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பனங்கிழங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டன. பொங்கல் அடுப்புகட்டிகளும் விற்பனைக்கு வந்து உள்ளன. வர்ணம் பூசப்பட்ட ஒரு பொங்கல் அடுப்புகட்டி ரூ.70-க்கும், வர்ணம் பூசாத பொங்கல் அடுப்புகட்டி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மஞ்சள் குலைகள் பொங்கலையொட்டி நேற்று முதல் அறுவடை பணிகள் நடந்தன. தொடர்ந்து மஞ்சள் குலைகள் விற்பனைக்காக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டன.

Next Story