மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் காயம் உறவினர்கள் சாலைமறியல்


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் காயம் உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 9:21 PM GMT)

கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பாகூர்,

கிருமாம்பாக்கம் அடுத்த சார்காசிமேடு பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 26). இவர் பெட்ரோல் நிரப்புவதற்காக பிள்ளையார்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கு நேற்று மாலை வந்தார். பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வீடு திரும்ப கடலூர் - புதுச்சேரி சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாலைமறியல்

அருண் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் சார்காசிமேடு பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து புதுச்சேரி - கடலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் விபத்து ஏற்படுத்திவிட்டு அங்கே நின்ற தனியார் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், அதிவேகமாக பஸ்கள் செல்வதை தடுக்கவேண்டும் என்றனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதிஅளித்தனர். அதன்பேரில் அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலைமறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story