படிக்கட்டு பயணத்தால் விபரீதம்: ரெயிலில் இருந்து தவறி விழுந்த போலீஸ்காரர் படுகாயம்


படிக்கட்டு பயணத்தால் விபரீதம்: ரெயிலில் இருந்து தவறி விழுந்த போலீஸ்காரர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 10:09 PM GMT)

படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த போலீஸ்காரர், ரெயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள கொசவப்பட்டியை சேர்ந்தவர் ஞானஆரோக்கியம் (வயது 47). இவர், பழனி 14-வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். நேற்று காலை இவர், திருவனந்தபுரத்தில் இருந்து பழனி, திண்டுக்கல் வழியாக மதுரை நோக்கி செல்லும் அமிர்தா விரைவு ரெயிலில் திண்டுக்கல்லுக்கு வந்துகொண்டிருந்தார்.

ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஞானஆரோக்கியத்துக்கு இருக்கை கிடைக்கவில்லை. இதையடுத்து படிக்கட்டில் அமர்ந்தபடியே அவர் பயணம் செய்தார். ரெயில், திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக ஞானஆரோக்கியம் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்த பயணிகள் அலறி கூச்சல் போட்டனர். அவர்களின் சத்தத்தை அந்த பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரெயில்வே ஊழியர்கள் கேட்டனர்.

சிகிச்சை

உடனே அங்கு விரைந்து சென்ற ஊழியர்கள், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஞானஆரோக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் படிக்கட்டில் இருந்து போலீஸ்காரர் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story