சேமித்து வைத்த பழைய 500 ரூபாய் நோட்டுகள்; உழைத்து சம்பாதித்த ரூ.12 ஆயிரத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி
கூலி வேலை செய்து சம்பாதித்த ரூ.12 ஆயிரம் பழைய 500 ரூபாய் நோட்டுகளாக உள்ளதால் அதனை மாற்ற முடியாமல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கண்ணீருடன் முறையிட்டார்.
வேலூர்,
வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 70). இவர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமல் தான் சேமித்து வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகள் ரூ.12 ஆயிரத்தை மாற்ற முடியவில்லை என கண்ணீருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனு அளித்தார். மூதாட்டியின் சிரமத்தை உணர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர், அதுதொடர்பாக விசாரிக்கும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
விசாரணையில், மூதாட்டி கணவரை பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வருவதும், அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததும் தெரிய வந்தது. மேலும் மூதாட்டி உடல்நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூலிவேலை செய்து உழைத்து சம்பாதித்து சேமித்து வைத்த பணத்தை தலையணைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டதையடுத்து அந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அந்த நோட்டுகள் செல்லாது என்று வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அந்த நோட்டுகளை பல இடங்களில் மாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அவர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு வந்து கோரிக்கை வைத்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் விசாரித்தார். அப்போது அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின்படி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற முடியாது என்று தெரிவித்தனர்.
அதனால் மூதாட்டி பரிதவிப்புக்கு உள்ளானார். பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர், மூதாட்டியிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து புவனேஸ்வரி அங்கிருந்து சோகத்துடன் வீட்டிற்கு சென்றார்.
முன்னதாக அவர், ‘‘நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். அதற்கு மாதந்தோறும் ரூ.1,300 வாடகை கொடுக்கிறேன். அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை ரூ.1,000 வீட்டின் வாடகைக்கு கொடுத்து விடுவதால் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனவே மாவட்ட நிர்வாகம் இலவச வீடு வழங்க வேண்டும்’’ என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தார்.