மைசூருவில், அரசு பள்ளியில் வகுப்பறைகளாக மாறிய ரெயில் பெட்டிகள்


மைசூருவில், அரசு பள்ளியில் வகுப்பறைகளாக மாறிய ரெயில் பெட்டிகள்
x
தினத்தந்தி 14 Jan 2020 4:30 AM IST (Updated: 13 Jan 2020 9:53 PM IST)
t-max-icont-min-icon

மைசூருவில், அரசு பள்ளிக்கு பயனற்று கிடந்த ரெயில் பெட்டிகளை ரெயில்வே அதிகாரிகள் வகுப்பறைகளாக மாற்றி கொடுத்தனர். அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மைசூரு, 

மைசூரு டவுன் அசோகபுரத்தில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பள்ளி கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்தன. இதனால் கட்டிடங்களை சீரமைக்க கோரியும், புதிய கட்டிடங்களை கட்டித்தரக்கோரியும் பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரிய-ஆசிரியைகளும் கல்வித்துறை அதிகாரிகளிடமும், ரெயில்வே அதிகாரிகளிடமும் முறையிட்டு வந்தனர்.

ஆனால் அவர்கள் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் அடியில் அமர்ந்து படித்து வந்தனர். ஆசிரிய-ஆசிரியைகள் மரங்களின் அடியில் வைத்தே வகுப்புகளையும் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரெயில்வே அதிகாரிகள் அந்த பள்ளியை வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு புதிதாக வகுப்பறை கட்டிடங்களை கட்ட பல லட்சம் ரூபாய் செலவாகும் என்பதை ரெயில்வே அதிகாரிகள் கணித்தனர். இதையடுத்து பயன்பாட்டில் இல்லாத 2 ரெயில் பெட்டிகளை இங்கு கொண்டு வந்து அவற்றை வகுப்பறைகளாக மாற்றித்தருவதாக ஆசிரிய-ஆசிரியைகளிடம் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கு ஆசிரிய-ஆசிரியைகளும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அதே பகுதியில் அமைந்திருக்கும் ரெயில்வே பணிமனையில் இருந்து 2 ரெயில் பெட்டிகள் கிரேன் எந்திரங்கள் மூலம் அந்த அரசு பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வேத்துறையின் நிதியின் மூலம் அந்த ரெயில்பெட்டிகளை ஒன்றிணைத்து, சீரமைத்து, பெயிண்ட் அடித்து, கழிவறைகளையும் சீரமைத்தனர். மேலும் ரெயில் பெட்டிகளுக்குள் தலா 30 மாணவ-மாணவிகள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு 4 வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் மாணவ-மாணவிகள் அமர்ந்து படிக்க மேஜைகள், ஆசிரியர்களுக்கான மேஜைகள், கரும்பலகை, மின்சார வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி ஒவ்வொரு வகுப்பறையையும் அழகுபடுத்தினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறைகளாக மாற்றப்பட்ட அந்த ரெயில் பெட்டிகள் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் அந்த 4 வகுப்பறைகளிலும் மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ரெயில்வே அதிகாரிகளின் இந்த புதிய முயற்சியை அப்பகுதி மக்களும், அரசியல் தலைவர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Next Story