போகி பண்டிகையின்போது “பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்” - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்


போகி பண்டிகையின்போது “பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்” - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 5:07 PM GMT)

“போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை எரிக்க வேண்டாம்” என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி,

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். அன்று பழைய கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இந்த பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்று ஆகும்.

ஆனால், தற்போது போகி பண்டிகை அன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிப்பதால், நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப்புகை கலந்த பனிமூட்டத்தால் விமானங்கள் புறப்படுவதற்கும், சாலை போக்குவரத்துக்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்க வேண்டாம். மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி போகி பண்டிகையை கொண்டாடுவோம். குப்பையை முறைப்படி ஒழித்து, பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story