கம்மநல்லூர் ஊராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் - வார்டு உறுப்பினர்கள் மனு


கம்மநல்லூர் ஊராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் - வார்டு உறுப்பினர்கள் மனு
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 6:35 PM GMT)

கம்மநல்லூர் ஊராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள் மனு கொடுத்தனர்.

கரூர், 

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றார். நாளை (புதன்கிழமை) பொங்கல் பண்டிகை என்பதால், பொதுமக்கள் வீடுகளை தூய்மை செய்யும் பணி மற்றும் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டினர். இதனால் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மனுதாரர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட நேற்று குறைவாகவே இருந்தது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மநல்லூர் ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் உஷாராணி உள்பட 5 பேர் வந்து மனு கொடுத்தனர். அதில், கம்மநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த 11-ந்தேதி, துணைத்தலைவர் பதவிக் கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் துணைத்தலைவர் பதவிக்கு உஷாராணி உள்பட 2 பேர் போட்டியிட்டனர். இதில் விதிமீறல் நடந்ததால் உஷாராணி உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். இந்தநிலையில் தேர்தல் ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவொரு அறிவிப்பும் செய்யாமல் மீதமுள்ள உறுப்பினர்களை வைத்து தேர்தலை நடத்தி துணைத்தலைவரை அறிவித்துள்ளனர். எனவே துணைத்தலைவர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடவூர் வட்டம் வேப்பங்குடியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற பெரியாண்டவர் மற்றும் சந்தனகருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு தொன்று தொட்டு தை மாதம் 1-ந்தேதி பல்வேறு வகையான பழங்களை படையலிட்டு பழபூஜை நடத்துவது வழக்கமாகும். ஆனால் சில காரணங்களால் கடந்த 6 ஆண்டுகளாக பழபூஜையை நடத்தாமல், இந்துசமய அறநிலையத்துறை காலம் தாழ்த்தி வருகிறது. எனவே இந்த ஆண்டாவது பழபூஜை நடத்திட வழிவகை செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள் என கூறியிருந்தனர்.

லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் அளித்த மனுவில், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கழிவறை பராமரிப்பின்றி உள்ளது. எனவே இதனை சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். லாலாபேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் காவல் துறையினரின் குடியிருப்பு கட்டிடங்கள் அருகே முளைத்துள்ள வேண்டாத செடி, கொடிகளை அகற்றிட வேண்டும். பிள்ளாபாளையம் வாய்க்காலில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி, இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் உதவி ஆணையர் மீனாட்சி (கலால்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வசுரபி, சமூக பாதுகாப்புதிட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story