பட்னாவிஸ் கிண்டல் அடித்த விவகாரம்: ‘3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது’ உத்தவ் தாக்கரே பதிலடி


பட்னாவிஸ் கிண்டல் அடித்த விவகாரம்: ‘3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது’ உத்தவ் தாக்கரே பதிலடி
x
தினத்தந்தி 14 Jan 2020 5:45 AM IST (Updated: 14 Jan 2020 1:01 AM IST)
t-max-icont-min-icon

தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் அடித்தது குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மராட்டியத்தில் 3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது என பதிலடி கொடுத்தார்.

மும்பை,

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பாரதீய ஜனதா உடனான உறவை உதறிய சிவசேனா, கொள்கையில் வேறுபட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனால் பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

கருத்தியலில் வேறுப்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசை 3 சக்கர வாகனத்துடன் ஒப்பிட்டு அந்த கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என பாரதீய ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கேலி செய்து இருந்தார்.

தேவேந்திர பட்னாவிசின் இந்த விமர்சனத்துக்கு தற்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதில் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த அரசாங்கம் மூன்று சக்கர வண்டி போன்றது என்று நாங்கள் விமர்சிக்கப்பட்டோம். எங்கள் அரசாங்கம் ஒரு மூன்று சக்கர வண்டி என்பது சரி தான். ஆனால் அதைவிட முக்கியமானது என்னவென்றால் அது சரியாக இயங்குகிறதா என்பது தான்.

சவாரி செய்யும் போது ஒரு வாகனத்தின் சமநிலை மிக முக்கியமானது. அந்த வகையில் எங்களது அரசாங்கம் சரியாக இயங்கி கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story