‘இன்றைய சிவாஜி நரேந்திர மோடி’ பா.ஜனதா வெளியிட்ட புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு


‘இன்றைய சிவாஜி நரேந்திர மோடி’ பா.ஜனதா வெளியிட்ட புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 Jan 2020 5:30 AM IST (Updated: 14 Jan 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

‘இன்றைய சிவாஜி நரேந்திர மோடி' என்ற பாரதீய ஜனதா தலைவர் ஜெய் பகவான் கோயலின் புத்தகத்துக்கு மராட்டியத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மும்பை,

பஞ்சாபை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர் ஜெய் பகவான் கோயல் ‘ஆஜ் கி சிவாஜி, நரேந்திர மோடி' (இன்றைய சிவாஜி நரேந்திர மோடி) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டு உள்ள இந்த புத்தகத்துக்கு மராட்டியத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்து உள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியை மதிக்கிறோம். ஆனால் சிவாஜி மகாராஜாவை யாருடனும் ஒப்பிடுவதை ஏற்க முடியாது.

ஆஜ் கி சிவாஜி, நரேந்திர மோடி என புத்தகம் எழுதி இருப்பது மன்னர் சத்ரபதி சிவாஜியை அவமதிப்பு செய்வதாகும்.

பாரதீய ஜனதாவில் இருக்கும் மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல்கள் (உதயன்ராஜே போஸ்லே, சத்ரபதி சம்பாஜி ராஜே எம்.பி.) அவருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதை ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் அவர்கள் உடனடியாக பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேற வேண்டும். அந்த புத்தகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என பாரதீய ஜனதா அறிவிக்க வேண்டும். மேலும் புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள் சகன் புஜ்பால், ஜிதேந்திர அவாத், காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரும் ‘ஆஜ் கி சிவாஜி, நரேந்திர மோடி' புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், மராட்டிய மக்களின் உணர்வை புண்படுத்தி விட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அதுல் லோந்தே ஜெய் பகவான் கோயல் மீது நாக்பூர் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

அந்த புத்தகத்துக்கு மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலும், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வுமான சிவேந்திரராஜே போசலேவும் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், கட்சியின் பெயருக்கு ஒரு சிக்கலை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது. கட்சித் தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக, எந்த மட்டத்திலும் குனிந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியை சிவாஜி மகாராஜாவுடன் ஒப்பிடுவதை நான் முழுவதுமாக எதிர்க்கிறேன் என்றார்.

அந்த புத்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சத்ரபதி சம்பாஜி ராஜே எம்.பி.யும் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், ஆஜ் கி சிவாஜி, நரேந்திர மோடி புத்தகத்தை கண்டித்து சோலாப்பூரில் சிவசேனாவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் ஜெய் பகவான் கோயல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதேபோல அவுரங்காபாத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவரணி சார்பில் போலீசில் ஜெய் பகவான் கோயல் மீது புகார் கொடுக்கப்பட்டது.


Next Story