மத்திய மந்திரி அனுராக் சிங்குடன் சரத்பவார் சந்திப்பு; பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஆலோசனை
முறைகேடு புகாரில் சிக்கிய பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து டெல்லியில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாக்குருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.
மும்பை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு சுமார் 16 லட்சம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பி.எம்.சி.) வங்கியில் ரூ.4,355 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அந்த வங்கியின் செயல்பாடுகளை 6 மாதத்திற்கு முடக்கியது.
பி.எம்.சி. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு அந்த வங்கியை மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முறைகேடு புகாரில் சிக்கி உள்ள பி.எம்.சி. வங்கிக்கு புத்துயிர் ஊட்டுவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் டெல்லியில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாக்குரை சந்தித்து ஆலோசனை செய்தார்.
பின்னர், பி.எம்.சி. வங்கி பிரச்சினை தொடர்பாக மத்திய நிதித்துறை இணை மந்திரி உடனான இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக சரத்பவார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
Related Tags :
Next Story