ரூ.4¼ லட்சம் சேலைகள் வாங்கி மோசடி: ஜவுளி வியாபாரியை ஏமாற்றிய 4 பேர் கைது


ரூ.4¼ லட்சம் சேலைகள் வாங்கி மோசடி: ஜவுளி வியாபாரியை ஏமாற்றிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2020 10:45 PM GMT (Updated: 13 Jan 2020 8:10 PM GMT)

ஈரோட்டில் ஜவுளி வியாபாரியை ஏமாற்றி ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள சேலைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே துடுப்பதி ஆயிக்கவுண்டன்பாளையம் ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 40). ஜவுளி வியாபாரி. இவரிடம் கடந்த மாதம் 3-ந் தேதி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர், தனது பெயரை பிரகாஷ் என்றும், ஈரோடு முனிசிபல் காலனியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருவதாகவும், 618 சேலைகள் உடனடியாக தேவைப்படுவதால், சேலைகளை கொண்டு வந்து கொடுத்தால் உடனடியாக அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து வேலுச்சாமி ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்து 807 மதிப்பிலான 618 சேலைகளை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஈரோடு முனிசிபல் காலனிக்கு சென்றார். அங்கு அந்த நபரை சந்தித்து ஜவுளிகளை கொடுத்தார். அவர் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள தனது மாமா கடையில் பணத்தை வாங்கி தருவதாக வேலுச்சாமியை உடன் அழைத்து சென்றார். அப்போது அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் வேலுச்சாமியை நிற்க வைத்துவிட்டு, அந்த நபர் மாயமானார். நீண்ட நேரமாக காத்திருந்தும் அந்த நபர் திரும்பி வரவில்லை. இதனால் அந்த நபரின் செல்போனுக்கு வேலுச்சாமி தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் வேலுச்சாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அந்த நபரை வலைவீசி தேடி வந்தனர். மேலும், மோசடியில் ஈடுபட்டவரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயரத், பழனிவேல், போலீஸ் ஏட்டு தவசி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் ஈரோடு சூளை சத்தி ரோட்டில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் சேலைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் இருந்த 4 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோட்டை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 31), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திநகரை சேர்ந்த சேகர் (45), குமாரபாளையம் ஆனங்கூர் ரோட்டை சேர்ந்த கோபிராஜ் (42), சேலம் சாணாந்தெருகாடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (50) ஆகியோர் என்பதும், அவர்கள் 4 பேரும் வேலுச்சாமியிடம் ஏமாற்றி வாங்கிய சேலைகளை விற்பதற்காக கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதில் புருஷோத்தமன்தான் பிரகாஷ் என்ற பெயரில் வேலுச்சாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு சேலைகளை வாங்கியதும், அதற்கு மற்ற 3 பேர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து புருஷோத்தமன், சேகர், கோபிராஜ், பழனிசாமி ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சேலைகளை மீட்டனர். மேலும், மோசடிக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story