தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் மார்க்கெட் அருகே உள்ள ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் மாற்றுவழியில் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் விளைந்த காய்கறிகள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். பொதுமக்கள் அதிகளவில் மார்க்கெட்டுக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகள், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் வரத்து குறைவாக இருந்தது. நேற்று சுமார் 50 லோடு வாழைத்தார்கள் வந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திருச்சி, மோகனூர், காட்டுப்புதூர், குளித்தலை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழைகள் விளைந்து உள்ளன. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று வாழைத்தார்கள் வாங்கி வருகிறார்கள்.
தூத்துக்குடி மார்க்கெட்டில் நாட்டு பழ வாழைத்தார் ரூ.700-க்கும், கதலி ரூ.250-க்கும், பூலான்செண்டு ரூ.500-க்கும், கோழிக்கூடு ரூ.400 முதல் ரூ.450 வரையும், சக்கை ரூ.450-க்கும் விற்பனையானது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்பூரவள்ளி ரூ.500-க்கும், தேனி, சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட செவ்வாழை ரூ.800 முதல் ரூ.900 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மக்கள் அதிகளவில் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குழம்பு வைப்பது வழக்கம். இதனால் மக்கள் ஆர்வமுடன் காய்கறிகளையும் வாங்கி சென்றனர். கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.20-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.50 முதல் ரூ.100 வரைக்கும் விற்றது. மற்ற காய்கறிகள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
கத்தரிக்காய்-ரூ.100, தக்காளி-ரூ.20, மிளகாய்-ரூ.25, வெண்டைக்காய்-ரூ.50-ரூ.100, அவரைக்காய்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.40, முட்டைகோஸ்-ரூ.20, சேனைக்கிழங்கு-ரூ.20, சிறுகிழங்கு-ரூ.50, பீன்ஸ்-ரூ.60, பூசணி-ரூ.15-ரூ.20, முருங்கைக்காய்-ரூ.200, கேரட்-ரூ.40, பீட்ரூட்-ரூ.30, சவ்சவ்-ரூ.20, கருணைக்கிழங்கு-ரூ.40, சேம்பு-ரூ.50, சீனிக்கிழங்கு-ரூ.25, தடியங்காய்-ரூ.15, சிறியவெங்காயம் -ரூ.110, பல்லாரி-ரூ.40.
Related Tags :
Next Story