சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: நெல்லையில் மேலும் 12 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையில் மேலும் 12 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8-ந் தேதி வாகன சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை 2 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள், காரில் தப்பி சென்றனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக பயங்கரவாதிகளான குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 32), கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர் படத்தை போலீசார் வெளியிட்டு தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, கியூ பிரிவு, தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழைய குற்றவாளிகள் பட்டியல் தயார் செய்து, அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் செல்போன் எண்கள் மூலமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக நெல்லை மேலப்பாளையம், விக்கிரமசிங்கபுரம், தென்காசி ஆகிய ஊர்களை சேர்ந்த 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் பிடித்தனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பேட்டை, பத்தமடை, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 12 பேரை பிடித்து போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அவர்களின் செல்போன் எண்களை வைத்து பயங்கரவாதிகளுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் இவர்களில் சிலரை விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் போலீசார் விடுவித்தார்கள். சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக மேலும் 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story