விழுப்புரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் காப்பியடித்த போலீஸ்காரர் சிக்கினார்
விழுப்புரத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் துண்டுச்சீட்டு பார்த்து காப்பியடித்த போலீஸ்காரர் சிக்கினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த முதல்நிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், ஏட்டுகள் இத்தேர்வை எழுதினர்.
இந்த தேர்வையொட்டி தேர்வு மையத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எழுதுதல், துண்டுச்சீட்டு பார்த்து காப்பியடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க தேர்வர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வு மைய அறைகளிலும் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் தேர்வர் ஒருவர் துண்டுச்சீட்டு பார்த்து தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். இவரை அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் கண்டுபிடித்தார். பின்னர் அவரை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர், அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் மணி என்பதும், இவர் துண்டுச்சீட்டை தான் அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைத்து தேர்வு மையத்திற்குள் கொண்டு சென்று அதனை பார்த்து காப்பியடித்தபடி தேர்வை எழுதியதும் தெரியவந்தது. உடனே அவரிடமிருந்த விடைத்தாளை ஐ.ஜி. கணேசமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் கைப்பற்றியதோடு அவரை தேர்வு எழுத அனுமதி மறுத்து மையத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது, சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் காப்பியடித்ததாக பிடிபட்ட முதல்நிலை காவலர் மணி மீது விரைவில் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்றார். சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் காப்பியடித்து எழுதி போலீஸ்காரரே பிடிபட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story