திருப்போரூரில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை பறித்த 3 பேர் கைது


திருப்போரூரில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 9:58 PM GMT)

திருப்போரூரில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை பறித்து சென்ற 3 பேரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் விரைந்து சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

திருப்போரூர், 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலை பஸ் நிலையம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். பின்னர் பெட்ரோல் போடும் போது, பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஒருவருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அதை தட்டிக்கேட்ட ஆண் பணியாளரை அவர்கள் தாக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பெண் ஊழியரின் கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு வேகமாக தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து பங்க் உரிமையாளர் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருப்போரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, மற்றும் பன்னீர்செல்வம் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பணத்தை பறித்து விட்டு வேகமாக தப்பிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதில் மோட்டார் சைக்கிளின் எண் சிக்கியது. அதை வைத்து தப்பிச்சென்ற நபர்களை போலீசார் தேடிவந்தனர். இதைத்தொடர்ந்து, திருப்போரூர் ரவுண்டானா அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுற்றி திரிந்ததை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆமூர் பகுதியை சேர்ந்த அஜித் குமார் (வயது 22), ஜஸ்டின் பிரபாகரன் (24), சிறுதாவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது.

அவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதையும், அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் 3 பேரையும் செங்கல்பட்டு கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story