சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 வயது குழந்தை கடத்தல் - ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 வயது குழந்தை கடத்தல் - ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Jan 2020 3:45 AM IST (Updated: 14 Jan 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 வயது குழந்தை கடத்திய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, 

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அசார் அலி. இவரது மனைவி மர்சீனா(வயது 25). இவர்களுக்கு மஷிதா(6), ரஷிதா(2) என 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் மர்சீனா தனது கணவர் அசார் அலியை விட்டு பிரிந்து தனியாக வாழந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் சென்னை வந்த மர்சீனாவுக்கு, மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹமீது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. மேலும் ஹமீது தனது நண்பரையும் மர்சீனாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து 3 பேரும் சென்னையில் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு மர்சீனா, தனது குழந்தைகள் மற்றும் ஹமீது ஆகியோர் வந்தனர்.

பின்னர் நடைமேடை 10-ல் அனைவரும் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை மர்சீனா தூக்கத்தில் இருந்து எழுந்தபோது குழந்தை ரஷிதாவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் ரெயில் நிலையம் முழுவதும் குழந்தையை தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மர்சீனா சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் ஹமீதுக்கும் அவரது நண்பருக்கும் ஏற்பட்ட தகராறில் குழந்தை ரஷிதாவை ஹமீதின் நண்பர் கடத்தியது தெரியவந்தது. மேலும் ஹமீதின் நண்பர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் குழந்தை கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து ஹமீதின் நண்பரை தேடி வருகின்றனர்.

Next Story