பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சள்குலை வரத்து அதிகரிப்பு


பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சள்குலை வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2020 3:45 AM IST (Updated: 14 Jan 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி-மஞ்சள் குலை வரத்து அதிகரித்துள்ளது. கூரைப்பூ, தோரணங்களும் குவிக்கப்பட்டு உள்ளன.

சென்னை, 

பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த வாரத்திலேயே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு விற்பனைக்காக வர தொடங்கியது. நாளை (புதன்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்நிலையில் கரும்பு வரத்து அதிகமாகவே இருக்கிறது. இதனால் கரும்பின் விலை கடும்வீழ்ச்சி அடைந்துள்ளது.

தற்போது ஒரு கட்டு கரும்பு (20 எண்ணிக்கையில்) ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு கட்டு கரும்பு ரூ.400 வரை விற்பனையானது. மதுரை மாவட்டம் மேலூர் கரும்பு மட்டும் (கட்டு) ரூ.300 வரை விற்கப்படுகிறது. ஏனென்றால் அதன் தடிமன் அதிகம். ருசியும் பிரமாதமாக இருக்கும்.

அதேபோல இஞ்சி, மஞ்சள் குலைகளும் அதிக அளவில் வரவழைக்கப்பட்டு உள்ளன. ஒரு குலை மஞ்சள் ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், ஒரு குலை இஞ்சி ரூ.35 முதல் ரூ.55 வரையும் விற்கப்படுகிறது. அதேபோல கூரைப்பூ மற்றும் தென்னை ஓலைகளும் அதிகளவில் குவிக் கப்பட்டு உள்ளன. கூரைப்பூ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், மாவிலை ரூ.20 முதல் ரூ.50 வரையிலும், தென்னை ஓலை ரூ.10 முதலும் விற்பனையாகி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆரஞ்சு தவிர மற்ற பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

ஆரஞ்சு விலை ரூ.10 உயர்ந்து (கிலோவில்), தற்போது ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது. அதேவேளை இதர பழங்களின் விலையில் மாற்றம் இல்லை. தற்போது இமாசல ஆப்பிள் ரூ.100 முதல் ரூ.130-க்கும், வாஷிங்டன் ஆப்பிள் ரூ.180 முதல் ரூ.200-க்கும், மாதுளை ரூ.100 முதல் ரூ.130-க்கும், சாத்துக்குடி, சீதாப்பழம் தலா ரூ.50 முதல் ரூ.60-க்கும், சப்போட்டா, கொய்யா தலா ரூ.40-க்கும், இலந்தைப்பழம் ரூ.10-க்கும், கருப்பு திராட்சை ரூ.60-க்கும், பன்னீர் திராட்சை ரூ.80-க்கும், ‘சீட்லெஸ்’ திராட்சை ரூ.100-க்கும், அன்னாச்சி பழம் ரூ.45 முதல் ரூ.55 வரையிலும், பலாப்பழம் ரூ.40-க்கும், வாழை (தார்) ரூ.200 முதல் ரூ.400 வரையிலும் விற்பனையாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேவேளை பூக்களின் விலை லேசாக உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு காமராஜர் புஷ்ப வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அருள் விசுவாசம் கூறுகையில், “பனிப்பொழிவால் வரத்து சற்று பாதித்துள்ள நிலையில், பூக்கள் விலை கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்திருக் கிறது. (கிலோவில்) மல்லி ரூ.2,500-க்கும், சாதிமல்லி ரூ.900-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா (பெங்களூரு) ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சாமந்தி, சம்பங்கி (லில்லி பிளவர்) தலா ரூ.50-க்கும், ‘கட் ரோஸ்’ (20 எண்ணிக்கையில்) ரூ.150-க்கும், கோழிக்கொண்டை ரூ.30-க்கும், மருகு (கட்டு) ரூ.5-க்கும் விற்பனையாகிறது. ஆனாலும் மக்கள் வரத்து எதிர்பார்த்த நிலையில் இல்லை. இதனால் வியாபாரம் மந்தமாகவே உள்ளது” என்றார்.

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருப்பதால், இன்று (செவ்வாய்க்கிழமை) மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story