தமிழகத்தை போல் வெளிநாட்டு மணலை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
தமிழகத்தை போல், குறைந்த விலையில் வெளிநாட்டு மணலை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என புதுச்சேரி சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
காரைக்கால்,
புதுச்சேரி சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர், காரைக்காலில் இயங்கும் தனியார் துறைமுகத்தில் நேற்று ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்தினர். கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், அசனா, துணை ஆட்சியர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, துறைமுக மேலாண் இயக்குனர் ஜி.ஆர்.கே.ரெட்டி, பொதுமேலாளர் ராஜேஸ்வர ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறிய தாவது:-
துறைமுகத்தால் ஏற்படும் மாசு குறித்து, துறைமுகத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு வழங்குவது, சுற்றுப்புற சூழல் மாசு இல்லாமல் பார்த்துகொள்வதில், துறைமுகத்தின் பங்கு குறித்து விரிவாக பேசப்பட்டது. குறிப்பாக, சுற்றுப்புற சூழலுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்கவும், வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவும் துறைமுக நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும், துறைமுகத்தில் இருந்து ஆண்டுதோறும் அரசுக்கு நியாயமான வருவாய் வரவேண்டும். துறைமுகத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ஆண்டிற்கு ரூ.3 கோடி அளவிற்கு, மாவட்ட கலெக்டர் வழியாக காரைக்கால் மக்களுக்கான அடிப்படை வசதிகள், வளர்ச்சிக்காக செலவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விற்பனை செய்யப்படாமல் உள்ளது. தமிழகத்தில் ஒரு லோடு மணல் ரூ.18 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் ஒரு லோடு ரூ.26 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 ஆயிரம் ரூபாய் கூடுதல் விலையாக உள்ளது. எனவே, தமிழகத்தை போல் குறைந்த விலையில் மணலை விற்பனை செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நடைபெறும் அரசு வேலைகளுக்கு இந்த மணலை பயன்படுத்துவது குறித்து, அரசுதான் முடிவு செய்யவேண்டும். நாங்கள் இது குறித்து ஒன்றும் சொல்ல இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story