வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தல்


வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:45 PM GMT (Updated: 14 Jan 2020 1:52 PM GMT)

வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஜனவரி 25–ந்தேதி தேசிய வாக்காளர் தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு ‘வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வியறிவு‘ என்ற மைய கருத்தை வலியுறுத்தி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. அதன்பிறகும் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க தேவையான விழிப்புணர்வு பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள், மாணவர்கள் அதிகமாக உள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுத்து தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியை கொண்டாட வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் படிவம்–6 வழங்கி பூர்த்தி செய்து பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரிகளில் இளம் வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி அவர்களையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேசிய வாக்காளர் தினத்தன்று அனைத்து அலுவலர்களும் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்பிரியா (திருச்செந்தூர்), துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கரநாராயணன், தேர்தல் தாசில்தார் நம்பிராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story