பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கரூர் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கரூர் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 1:53 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கரூர் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

கரூர், 

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் கொண்டாடக்கூடியது பொங்கல் திருநாள் ஆகும். அன்றைய தினம் வீட்டு வாசல் முன்பு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். அப்போது கரும்பு, மஞ்சள் கொத்து, அனைத்து வகையான காய்கறிகளுடன், தேங்காய், பழம் உடைத்து சூரியபகவானுக்கு படையலிட்டு பூஜை செய்வதுண்டு. இன்று(புதன்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கரூரில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக ஜவகர்பஜார் உள்ளிட்ட கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

கரூர் நகராட்சி அலுவலகம் அருகே, பஸ் நிலையம் அருகே, காமராஜர் மார்க்கெட், கோவை ரோடு, வெங்கமேடு உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் ஆங்காங்கே கரும்பு கட்டுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஜோடி கரும்பு ரூ.50, ரூ.60 என்ற விலைக்கு விற்பனையானது. இதேபோல் மஞ்சள் கொத்துகளையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். பொங்கல் வைப்பதற்காக மண்பானைகளை பொதுமக்கள் தேடிப்பிடித்து வாங்கி சென்றனர். பனங்கிழங்குகள் சாலையோரத்திலும், காய்கறி கடைகளிலும் விற்பனையானது. கட்டாகவும், எண்ணிக்கை கணக்கிலும் விலை நிர்ணயிக்கப்பட்டு, அவை விற்கப்பட்டது.

கரூர் பழையபைபாஸ் ரோட்டில் உள்ள உழவர் சந்தையில் கரூர், உப்பிடமங்கலம், க.பரமத்தி, புலியூர், வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். நேற்று அதிகாலை 4 மணி முதலே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காய்கறிளை பரப்பி வைத்து வியாபாரத்தை தொடங்கினர். பண்டிகைக்கு தேவையான காய்கறிகளை வாங்க கரூரில் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக ஒரே இடத்தில் வாங்கி சென்றனர். வெளிசந்தை மற்றும் கடைகளை விட உழவர் சந்தையில் காய்கறிகள் விலை நேற்று சற்று குறைந்து காணப்பட்டது.

விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் அனைத்தும் விற்றுவிட்டதாக உழவர் சந்தை வட்டாரத்தில் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் உழவர் சந்தைக்கு 32 ஆயிரத்து 650 கிலோ காய்கறிகள் வரத்து இருந்தது. இதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 39 ஆயிரம் ஆகும். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை அமலில் உள்ளதால், மக்கள் கட்டைப்பை, கூடை, சாக்குப்பை உள்ளிட்டவற்றில் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கி சென்றனர். மேலும் மக்கள் கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகளை அலுவலகத்தில் இருந்தபடியே கணினியில் அதிகாரிகள் கண்காணித்தனர்.

ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்திற்கு ஏலம்

கரூர் ரெயில்வே ஜங்‌ஷன் அருகே உள்ள மாரியம்மன் பூமார்க்கெட் வணிக வளாகத்திற்கு மாயனூர், தளவாய்பாளையம், கூடலூர், பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள், பூக்களை விற்பனைக்காக நேற்று காலை முதலே கொண்டு வந்தனர். பனிப்பொழிவு உள்ளிட்டவற்றின் காரணமாக மல்லிகைப்பூ உள்ளிட்ட சில பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால், அவற்றின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மார்க்கெட் பூ கடைகளில் நடந்த பொது ஏலத்தில் அதிகபட்சமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் வரை விலை போனது. மேலும் தரத்திற்கு ஏற்ற வகையில் ரூ.2 ஆயிரத்தில் இருந்தும் ஏலம் விடப்பட்டது. வீட்டில் பூ கட்டி விற்கும் பெண்கள், பூக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்களை ஏலம் எடுக்க ஆர்வத்துடன் குவிந்ததால் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

கரூர் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ என்ற அளவில் முல்லை பூ ரூ.2,500, ஜாதிப்பூ – ரூ.1,300, அரளிப்பூ – ரூ.350, செவ்வந்தி – ரூ.300, சம்மங்கி – ரூ.250, மரிக்கொழுந்து 2 கட்டு – ரூ.30, துளசி 4 கட்டு – ரூ.50 என்ற விலையில் விற்பனையானது. கடும் பனிப்பொழிவு உள்ளிட்டவற்றின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் கடந்த ஆண்டை விட, தற்போது விலையேற்றமாக இருக்கிறது. வியாபாரிகள் வாங்கி சென்று வீட்டில் வைத்து அவற்றை மாலையாக கோர்த்து விற்பனை செய்யும் போது மேலும் விலை அதிகரிக்கக்கூடும் என்று பூ மார்க்கெட் சங்க செயலாளர் மோகன் தெரிவித்தார்.

எகிப்து வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டாத மக்கள்

கரூரை பொறுத்தமட்டில் சமையலுக்கு பிரதானமான சின்னவெங்காய விலை ஏறுமுத்தில் இருப்பது மக்களுக்கு கவலையளிக்கும் விதமாக உள்ளது. காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட வெளியிடங்களில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.140 வரை விற்பனையானது. எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை, மகளிர் சுய உதவிக்குழு மூலம் கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வந்த போதிலும் மக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தொடர்ச்சியாக சின்னவெங்காயம் விலை ஏற்றத்திலேயே உள்ளது. கரூர் உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.96, ரூ.110–க்கு விவசாயிகள் விற்றதால், அதனை ஆர்வத்துடன் போட்டி போட்டு மக்கள் வாங்கி சென்றனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை, உப்பிடமங்கலம், செல்லாண்டிபட்டி, வெடிகாரன்பட்டி, பாகநத்தம், சின்னாகவுண்டனூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்ட சின்னவெங்காயம் விரைவில் அறுவடைக்கு வருகிற போது, கரூர் உழவர் சந்தையில் சின்னவெங்காயம் விலை குறைந்து ரூ.60, ரூ.80–க்கு விற்கப்படும் என்று என்று உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story