திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நீர் பாதுகாப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ‘ஸ்கோச்’ விருது - கலெக்டரிடம் வழங்கப்பட்டது
நீர் பாதுகாப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ‘ஸ்கோச்’ விருது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தேசிய அளவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு, நீர் மேம்பாடு, பொதுமக்களிடம் விழிப்புணர்பு ஏற்படுத்தியது ஆகியவற்றில் சிறந்த முறையில் விளங்கியது. இதனையொட்டி தேசிய அளவில் ‘ஸ்கோச்’ விருது கிடைத்துள்ளது. இதனை புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்த தகவலை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:–
திருவண்ணாமலை மாவட்டத்தின் பொதுமக்கள், விவசாயிகளுக்கு பெரிய ஊக்கம் தரும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாத்தின் மூலமாக தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு துளி நீர் பாதுகாக்கப்படும்.
கடந்த ஆண்டு ஜல் சக்தி அபியான் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக நமது மாவட்டததில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 11.2 மீட்டராக இருந்தது, தற்போது மேலும் 3.4 மீட்டருக்கு உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள், சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சி குழிகள், நீர் குட்டைகள், நீர்வரத்து கால்வாய்கள், பண்ணை குட்டைகள், அகழிகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், புனரமைப்பு பணிகள், ஏரிகளில் மரம் நடும் பணிகள் என மொத்தம் ரூ.87 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 1555 பணிகள் ரூ.44 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீர் வங்கி ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் ஏரிகள், குளங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 260 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் வங்கியில் பதிவு செய்து அதன் மூலம் 672 நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளுக்கும் விளிம்பு வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள மேடு, பள்ளம் பகுதிகள் கண்டறியப்பட்டு அதன் மூலம் நீர் சேமிப்பு பணிகள் எளிதாக மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் விவசாயத்தில் நெல் சாகுபடிக்கு 85 சதவீதம் நீர், கரும்பு சாகுபடிக்கு 75 சதவீதம் நீர் தேவையாக உள்ளது. அரசு மூலம் சொட்டு நீர் பாசனம் கரும்பு விவசாயத்திற்கு 100 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் 5060 சதவீதம் நீர் சேமிக்கப்பட்டு, 2 போகம் விளைச்சல் கிடைக்கிறது. நெல் பயிர் செய்வதில் எந்திர நடவு மேற்கொள்ளப்படுவதால் 2530 சதவீதம் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. தோட்டக்கலைப் பயிர்களிலும் சொட்டு நீர் பாசன முறையில் பப்பாளி, வாழை, தர்பூசணி போன்றவை பயிரிடப்பட்டு அதிக மகசூல் கிடைக்க பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உடனிருந்தனர்.
Related Tags :
Next Story