நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கொன்று புதைப்பு: காணவில்லை என நாடகமாடிய கணவர் உள்பட 3 பேர் கைது
நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்து விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவர் உள்பட 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சரண்யா (வயது 27). இவரும் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியை சேர்ந்த கணேசன் மகன் ராஜா என்கிற ரமேசும் காதலித்து கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகேஸ்வரன் (13) என்ற மூளை வளர்ச்சி குன்றிய ஒரு மகனும், 12 வயதில் ராகேஸ்வரர் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரண்யா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சரண்யா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சரண்யாவின் 2–வது மகன் ராகேஸ்வரர், ரமேஷ்சுடன் இருந்தார்.
இந்நிலையில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோதே, சரண்யா தனது 2–வது மகனையும் தன்வசம் ஒப்படைக்கக்கோரி கணவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுவன் பள்ளியில் படிப்பதால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை தந்தையுடன் இருக்கவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள் தாயுடன் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் 2–வது மகனை விடுவதும், அங்கிருந்து சரண்யா அவனை கூட்டி செல்வதுமாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2017–ம் ஆண்டு ஜூலை 30–ந்தேதி மகனை அழைத்துச் செல்ல போலீஸ் நிலையம் வந்த சரண்யாவை காணவில்லை.
சரண்யாவை கண்டு பிடித்துத்தரக்கோரி குணசேகரன் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் முறையாக விசாரணை நடத்தாததால், குணசேகரன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றம் அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தது. இதற்கிடையில் ரமேஷ் தனது மனைவியை காணவில்லை எனக்கூறி பல இடங்களில் தேடி வந்தார். இந்நிலையில் சரண்யா மாயமானது தொடர்பாக தேடப்பட்டு வந்த ரகு என்கிற ரகுவரன் மலேசியாவில் இருந்தார். அவர் வருகைக்காக காத்திருந்த போலீசார் மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் கடந்த 13–ந் தேதி காலை வந்திறங்கிய ரகுவரனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், ரகுவரனும், சரண்யாவின் கணவர் ரமேசும் சேர்ந்து சரண்யாவை கொலை செய்து காட்டில் புதைத்ததை ஒத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதைதொடர்ந்து ரமேஷ், போலீசாரை அழைத்து வந்து சம்புரான்பட்டி அருகே காட்டு பகுதியில் சரண்யாவை கழுத்தை நெறித்து கொலை செய்து புதைத்த இடத்தை காட்டினான். இதையடுத்து அந்த இடத்தை போலீசார் தோண்டியபோது எலும்புக்கூடு, உடை, கொலுசு, தோடு, கவரிங் செயின் போன்றவை கிடைத்தது. தொடர்ந்து சரண்யா கொலையில் தொடர்புடைய சம்புரான்பபட்டி நாடியான் மகன் பாட்சா என்கிற சிவப்பிரகாசத்தையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story