புளியங்குடியில் குழந்தைகளின் ஆபாச படம் பதிவிறக்கம்: போக்சோ சட்டத்தில் மாற்றுத்திறனாளி கைது
புளியங்குடியில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு அனுப்பிய மாற்றுத்திறனாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புளியங்குடி,
தென்காசி மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 32). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 9 ஆண்டுகளாக புளியங்குடி ஆர்.எஸ்.கே.பி. தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலமாக ஏராளமானோருக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தனர். அப்போது அவர் குழந்தைகளின் ஆபாச படங்களை பதி விறக்கம் செய்து, பலருக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தர்மராஜ், சாமிதுரை, ஏட்டுகள் ராஜ்மோகன், முருகன் ஆகியோர் நேற்று அதிரடியாக பாலசுப்பிரமணியனின் செல்போன் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்ய பயன்படுத்திய ஒரு செல்போன், கம்ப்யூட்டர் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்ததாக சென்னை உள்ளிட்ட சில இடங்களில் போலீசார் சிலரை கைது செய்துள்ள நிலையில், தென்காசி மாவட்ட போலீசாரின் முதல் நடவடிக்கையாக பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story