ஏரல் அருகே, அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


ஏரல் அருகே, அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 6:15 PM GMT)

ஏரல் அருகே பெருங்குளத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

ஏரல், 

ஏரல் அருகே பெருங்குளம் நகர பஞ்சாயத்து அலுவலகம் அருகில் தமிழக அரசின் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவது போன்று, விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 413 பஞ்சாயத்துகள், 19 நகர பஞ்சாயத்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் இளைஞர்கள் நல்ல உடல்திறனுடன் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று, மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

விழாவில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், ஏரல் தாசில்தார் அற்புதமணி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் தொகுதி செயலாளர் வடமலை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story