கணமூர் கிராமத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


கணமூர் கிராமத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Jan 2020 4:00 AM IST (Updated: 15 Jan 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

கணமூர் கிராமத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஒப்பதவாடி அருகே உள்ள கணமூர் கிராமத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியின் போது, இளைஞர்களுக்கு ரூ. 58 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை கலெக்டர் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த திட்டத்தின்கீழ் ஒப்பதவாடி, கட்டிகானப்பள்ளி, அரசம்பட்டி மற்றும் நாகோஜனஅள்ளி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தலா ரூ. 58 ஆயிரம் மதிப்பில் கபடி, வாலிபால், பால் பேட்மிண்டன் போன்ற விளையாட்டு போட்டிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி

மாவட்டம் முழுவதும் உள்ள 333 கிராம ஊராட்சிகள், 6 பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ. ஒரு கோடியே 97 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் தொடர்ச்சியாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனை குழு மற்றும் ஊராட்சி, பேரூராட்சி விளையாட்டு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் கபடி, வாலிபால், கிரிக்கெட் மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர், ஊராட்சி அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி, தாசில்தார் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்வர்பாஷா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் கவிதா கோவிந்தராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Next Story