கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் குறித்து டெல்லியில் சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு
கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் குறித்து டெல்லியில் சோனியா காந்தியை சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் குறித்து டெல்லியில் சோனியா காந்தியை சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சித்தராமையா ராஜினாமா
கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் மாநில தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் ராஜினாமா செய்துள்ளார்.
சித்தராமையாவின் ராஜினாமாவை நிராகரிக்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் மேலிடம், தினேஷ் குண்டுராவை தலைவர் பதவியில் இருந்து விடுவித்து, புதியவரை நியமிக்க திட்டமிட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்னாள் மந்திரிகள் டி.கே.சிவக்குமார் மற்றும் எம்.பி.பட்டீல் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
டி.கே.சிவக்குமாரை தலைவராக்க...
டி.கே.சிவக்குமாரை தலைவராக்க சித்தராமையா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. லிங்காயத் சமூக மக்களை காங்கிரஸ் பக்கம் இழுக்க அதே சமூகத்தை சேர்ந்த எம்.பி.பட்டீலை தலைவராக்க வேண்டும் என்று சித்தராமையா வற்புறுத்துகிறார். இந்த நிலையில் இதுகுறித்து விவாதிக்க சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் சித்தராமையா நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அவர் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து சித்தராமையா ஆலோசனை கூறினார். அவர், பா.ஜனதா பக்கம் உள்ள லிங்காயத் சமூக மக்களை காங்கிரசுக்கு இழுக்க வேண்டுமென்றால், அதே சமூகத்தை சேர்ந்த எம்.பி.பட்டீலுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் டி.கே.சிவக்குமாரை தலைவராக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
கட்டமைப்பதில் சிக்கல்
சித்தராைமயாவின் விருப்பத்திற்கு மாறாக காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்பட்டால், தலைவர்களிடையே ஒற்றுமை குலைந்து கட்சியை கட்டமைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அக்கட்சி மேலிடம் கருதுகிறது. இந்த நிலையில் சித்தராமையா இன்று (புதன்கிழமை) மீண்டும் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
Related Tags :
Next Story