திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிர்ப்பு; நகராட்சி அலுவலகம் முற்றுகை
திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இவற்றில் 4 வீதிகளில் கடைகள் உள்ளன. தினசரி 21 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி குப்பைகளை நகராட்சியினர் பெற்றுச்செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகராட்சிக்கு உட்பட்ட கொம்மேடு கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அதன்பின்னர் தற்போது செங்குந்தபுரம் கல்லுக்குழி என்ற இடத்தில் புதிதாக திடக்கழிவு மேலாண்மை கிடங்கு தொடங்கப்பட்டது.
ஆனால் அது எந்த காரணத்தினால் கிடப்பில் போடப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது நகராட்சி சார்பில் பாப்பாங்குளம் கிராமத்தில் மதுராபுரி நகர் என்ற இடத்தில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு தொடங்கியுள்ளனர். பாப்பாங்குளம் வேலாயுதநகர் பொதுமக்கள் நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் சென்று பாப்பாங்குளத்தில் புதிதாக திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க கூடாது என்றும், அப்படி அமைக்கப்பட்டால், சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது நகராட்சி ஆணையர் பாப்பாங்குளத்தில் தொடங்கப்பட்ட திட்டம் தொடங்கப்பட்டது தான் என கூறினார். இதற்கு பொதுமக்கள், திட்டம் தொடங்குவதற்கு முன்பு அதுகுறித்து அறிவிப்பு வெளியிட தவறியது ஏன்? என கேள்வி எழுப்பினர். இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்க வந்தால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்த மனுவை நகராட்சி ஆணையரிடம் கொடுத்துவிட்டு பொதுமக்கள் திரும்பி சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.