ஊட்டியில் பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்


ஊட்டியில் பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 7:17 PM GMT)

ஊட்டியில் பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

ஊட்டி,

தமிழகம் முழுவதும் இன்று(புதன்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நான் மதுரையில் பணிபுரிந்த போது ஜனவரி 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். பாதுகாப்பு பணிக்காக அதிகாலையில் செல்வோம். கடந்த 5 வருடங்களாக பொங்கல் பண்டிகை குடும்பத்தினரோடு கொண்டாடியது இல்லை. இதனால் நடப்பாண்டில் காவல்துறையினர் தங்களது குடும்பத்தினரோடு பொங்கல் பண்டிகை கொண்டாடவும், விளையாட்டு போட்டிகளில் பங்குபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இசை நாற்காலி

அனைவரும் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாட நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்று பரிசு வாங்குவது பெரிதல்ல. காவல்துறையினர் எல்லாரையும் தெரிந்துகொள்ள வேண்டும். விவசாயத்துக்கு மரியாதை கொடுக்கும் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். மத அடிப்படையிலான பண்டிகை கிடையாது. போட்டியில் கலந்துகொண்ட போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பெண் போலீசாருக்கு இசை நாற்காலி போட்டி, வாயில் கரண்டியை வைத்து, அதில் எலுமிச்சை வைத்து(லெமன் வித் ஸ்பூன்) குறிப்பிட்ட தூரம் நடந்து செல்லும் போட்டி, போலீஸ் அதிகாரிகளுக்கு லக்கி கார்னர் போட்டி நடத்தப்பட்டது.

பரிசுகள்

இதையடுத்து ஊட்டி நகர மத்திய போலீஸ் அணிக்கும், ஊட்டி ஆயுதப்படை அணிக்கும் கயிறு இழுத்தல் போட்டி நடந்தது. இதில் இரு அணிகளிலும் தலா 10 போலீசார் பங்கேற்று கயிறு இழுத்தனர். அதேபோல் பெண் போலீசாருக்கும் கயிறு இழுத்தல் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள் தனியார் பள்ளியில் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் போலீஸ் சூப்பிரண்டு வேட்டி, சட்டை அணிந்து குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் திருமேனி, சரவணன் மற்றும் போலீசார் குடும்பத்தினருடன் பங்கேற்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். முன்னதாக கரும்புகள் வைத்து பொங்கல் வைக்கப்பட்டது. 

Next Story