பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்: நெல்லை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு நேற்று நெல்லை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் குலை, மண்பானைகள், பச்சரிசி, வெல்லம், பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை நேற்று நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், தெற்கு பஜார், மேலப்பாளையம், பேட்டை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வாங்கினர். இதில் டவுன் ரதவீதிகள், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் கரும்பு விற்பனைக்கு போலீசார் தடை விதித்ததால், சீவலப்பேரி ரோட்டில் லாரிகளிலேயே கரும்பை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர். 10 கரும்பு கொண்ட கரும்பு கட்டுகள் ரூ.400-க்கும், ஒரு மஞ்சள்குலை ரூ.40-க்கும். 25 பனங்கிழங்கு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவில் முன்பு அடுப்பு, மண்பானைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அடுப்பு ஒன்று ரூ.70, அடுப்பு கட்டி ஒன்று ரூ.50, மண் பானை ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொங்கலிடுவதற்கு அடுப்பில் எரிக்க பயன்படும் பனை ஓலைகளும் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஒரு ஓலை ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆங்காங்கே சாலை ஓரங்களில் கரும்புகளும், மஞ்சள் குலைகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
நெல்லை டவுன் போஸ் மார்க்கெட்டில் ஸ்ரீவைகுண்டம், களக்காடு, செங்குளம் பகுதிகளில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கான வாழைத்தார்கள் கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. வாழைத்தார்களின் தரம், எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.450 வரை விற்பனை ஆனது. இதேபோல் 200 வாழை இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது.
காய்கறிகள் விலையும் நேற்று கணிசமாக உயர்த்தி விற்கப்பட்டது. நெல்லை டவுன் நயினார்குளம், டவுன் போஸ் மார்க்கெட், பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
வெள்ளை கத்தரிக்காய் கிலோ ரூ.130-க்கும், பச்சை கத்தரிக்காய் ரூ.80-க்கும், ஒரு முருங்கைக்காய் ரூ.20-க்கும், கிழங்குவகைகள் கிலோ ரூ.80-க்கும், கருணை கிழங்கும், சிறுகிழங்கும் கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
மக்கள் கூட்டம் அதிகளவில் குவிந்து காணப்பட்டதை ஒட்டி, மார்கெட்டுகள், கடைவீதிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கூடுதலாக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story