பெரியபாளையம் அருகே, தடுப்புச்சுவரில் லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு


பெரியபாளையம் அருகே, தடுப்புச்சுவரில் லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2020 10:00 PM GMT (Updated: 14 Jan 2020 7:27 PM GMT)

பெரியபாளையம் அருகே தடுப்புச்சுவரில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்படாததால் பெட்ரோல் நிலையம் அருகே உள்ள தடுப்புச்சுவரில் வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்துக்கு உள்ளாவது வழக்கமாக உள்ளது.ஆனால்,விபத்தை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஐதராபாத்தில் இருந்து சென்னை மாதவரத்தில் உள்ள பொருட்கள் இருப்பு வைக்கும் குடோனுக்கு மின் சாதனப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று பெரியபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

தண்டலம் பஜாரை தாண்டி பெரியபாளையம் நோக்கி வரும்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் கண் இமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரி மோதி சாலையின் தெற்கு திசையில் கவிழ்ந்தது.

இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. சிதறி கிடந்த கண்ணாடித் துகள்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அப்புறப்படுத்தினார். அதன் பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த அர்ஜுன் (வயது 22) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story