காஞ்சீபுரத்தில் அரசு பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய கலெக்டர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை பணியாளர்களுடன் மாவட்ட கலெக்டர் பொன்னையா, சமத்துவ பொங்கலை கொண்டாடினார்.
காஞ்சீபுரம்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று சுகாதார பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்துகொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை பணியாளர்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மண்பானையில் பொங்கலிடப்பட்டது. இதில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் உள்பட அனைத்து பணியாளர்களும் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற அனைத்து துறை அரசு பணியாளர்களுக்கு இடையே கோலப்போட்டி, பம்பரம் விடுதல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா பரிசுகளை வழங்கினார்.
விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) டி.ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) கவிதா, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா, மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story