இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் செலுத்த வேண்டும்; கலெக்டர் சாந்தா பேச்சு


இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் செலுத்த வேண்டும்; கலெக்டர் சாந்தா பேச்சு
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 7:32 PM GMT)

இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் செட்டிக்குளத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதற்கு பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட தேவையான கிரிக்கெட் மட்டைகள், பந்துகள், கையுறைகள், முதலான விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

கிராமப்புறங்களில் பாரம்பரியமான விளையாட்டுகளை மீட்கும் வகையிலும், கிராமபுற இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையிலும் தமிழக முதல்– அமைச்சரால் அம்மா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடத்த ஆணையிடப்பட்டு, அதனடிப்படையில் இன்று (அதாவது நேற்று) முதல் இளைஞர்களிடையே கிரிக்கெட், கபடி மற்றும் வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய நடவடிக்கைகளால் பெரம்பலூர் மாவட்டம் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதிகளில் பயின்றுவரும் மாணவிகள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு பதக்கங்களை பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மேலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்களிடையே தலைமை பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மையினை உருவாக்குதல் உள்ளிட்ட நற்பண்புகள் உருவாகின்றன. எனவே இளைஞர்கள் அனைவரும் தங்கள் உடல்நலனில் ஆரோக்கியம் செலுத்துவதற்கும், நற்பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கும் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ஜெயகுமாரி, ஆலத்தூர் வட்டாட்சியர் ஷாஜஹான், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கர்ணன், செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு, கைப்பந்து பயிற்றுனர் வாசுதேவன், டேக்வாண்டோ பயிற்றுனர் தர்மராஜன், செட்டிக்குளம் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story