தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் மோடியுடன் நாராயணசாமி சந்திப்பு கவர்னரை மாற்ற வலியுறுத்தல்


தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் மோடியுடன் நாராயணசாமி சந்திப்பு கவர்னரை மாற்ற வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Jan 2020 3:00 AM IST (Updated: 15 Jan 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பிரதமர் மோடியை நாராயணசாமி சந்தித்து பேசினார். கவர்னர் கிரண்பெடியை மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

புதுடெல்லி, 

புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்று இருந்தனர்.

டெல்லியில் முகாம்

டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். இதன்பின் கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து புதுவை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தனவேலு மீது புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இதன்பின் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோரை நாராயணசாமி சந்தித்துப் பேசினார். தொடர்ந்து டெல்லியில் நாராயணசாமி முகாமிட்டார். அங்கு அவர் நேற்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது அமித்ஷாவிடம் நாராயணசாமி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

மாநில அந்தஸ்து

புதுவை மாநிலம் சீரான வளர்ச்சி பெறவும், பல்வேறு நலத்திட்டங்களை தடையின்றி நிறைவேற்றிடவும், வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும், மாநில வருவாயை பெருக்கவும் மாநில அந்தஸ்து அவசியமாகிறது. இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும்.

2007-ம் ஆண்டு மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரிக்கென தனிக்கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் பழைய நிலுவைக்கடனாக ரூ.2,177 கோடியினை திருப்பி செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதுவரை ரூ.1,279 கோடி அசல் மற்றும் வட்டித்தொகையாக புதுச்சேரி அரசால் மத்திய அரசுக்கு திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. இதன்விளைவாக புதுச்சேரி மாநிலத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கடனை தள்ளுபடி செய்வதுடன் இதுவரை திருப்பி செலுத்தப்பட்ட தொகையினை திருப்பித்தர வேண்டும்.

நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும்

15-வது நிதிக்குழுவில் புதுச்சேரியினை சேர்க்கவேண்டும்.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் அவர்களுக்கு வழக்கப்படவேண்டிய நிலுவைத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் அத்தொகையினை மத்திய அரசே வழங்கியது. அதேபோல் தற்போதும் வழங்கவேண்டும்.

டெல்லியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஓய்வுகால பணப் பலன்களையும் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவினையும் மத்திய அரசே ஏற்பதுபோல் புதுச்சேரி அரசின் ஓய்வூதியர்களுக்கான செலவினையும் மத்திய அரசே ஏற்கவேண்டும். 2019-20ம் நிதியாண்டில் இதற்கென தேவைப்படும் ரூ.760 கோடியை மத்திய அரசு அளிக்கவேண்டும்.

புதுச்சேரி அரசின் நிதிநிலைமையினை கருத்தில்கொண்டு மத்திய நிதி ஒதுக்கீட்டினை வருடந்தோறும் 10 சதவீதம் உயர்த்தித்தர வேண்டும்.

ரூ.1000 கோடி

புதுவை சட்டசபைக்கு புதிய கட்டிடம் கட்டவும், உலகத்தரம் வாய்ந்த கன்வென்ஷன் சென்டர் கட்டவும் ரூ.1000 கோடியினை மத்திய அரசு அளிக்கவேண்டும்.

மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியுதவியினை மாநிலங்களுக்கு வழங்கப்படுவதுபோல் 60:40 என்ற விகிதத்தில் வழங்காமல் நிதி ஆயோக் பரிந்துரையின்படி யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கும்படி வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடியிடம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை எல்லையில் கடுமையாக தாக்கி படகுகளை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே கடல் எல்லைப்பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து சென்று மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை வலியுறுத்தி உள்ளேன்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையிலான நெடுஞ்சாலைத் திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கிறது. அந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதேபோன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து புதுச்சேரியை 15-வது நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள விதிகளை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாநிலத்திற்கு தொல்லை கொடுத்து வருகின்ற கவர்னர் கிரண்பெடியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story