கீழ் குமாரமங்கலத்தில் அம்மா விளையாட்டு மைதானம் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்


கீழ் குமாரமங்கலத்தில் அம்மா விளையாட்டு மைதானம் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 15 Jan 2020 4:30 AM IST (Updated: 15 Jan 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

கீழ் குமாரமங்கலத்தில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

நெல்லிக்குப்பம்,

கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் வகையில், அவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கும் விதமாக அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் ‘அம்மா விளையாட்டு மைதானங்கள்’ அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதில் 528 பேரூராட்சிகள் மற்றும் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் முதற்கட்டமாக கபடி, கைப்பந்து, கிரிக்கெட், பால் பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு மைதானங்கள் அமைக்கப்படுகிறது.

அந்த வகையில், கடலூர் ஊராட்சி ஒன்றியம் கீழ் குமாரமங்கலம் பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக விளையாடுவதற்கு அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் பக்கிரி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் குமரன், துணை தலைவர் சேவல் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார்.

விளையாட்டு திறன் மேம்படும்

விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த போட்டிகளை தொடங்கி வைத்ததுடன், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இளைஞர்களின் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்குவதற்கும், விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனைக்குழு மற்றும் ஊராட்சி, பேரூராட்சி, விளையாட்டு ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது.

மேலும் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் பகுதியில் கபடி, வாலிபால், கிரிக்கெட், பூப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் இருபாலரும் பங்கேற்று தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பாக அமையும். எனவே அனைவரும் இத்திட்டத்தை பயன்படுத்தி பயனடையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன் , கடலூர் நகர துணை செயலாளர் கந்தன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் குமார் நன்றி கூறினார்.


Next Story