கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
சென்னை,
பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பே கரும்பு விற்பனைக்காக வரவழைக்கப்பட்டது. ஓரிரு நாளுக்கு முன்பு இஞ்சி, மஞ்சள் குலைகள், கூரைப்பூ, தென்னை ஓலை, மாவிலை உள்ளிட்ட பொருட்கள் வந்தன.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய தினமான நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் அதிகமாகவே வந்தனர். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நேற்று வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
கடந்த 2 நாட்களை விட கரும்பு விலை நேற்று உயர்ந்தது. மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து வரும் கரும்பு கட்டு (20 எண்ணிக்கையில்) ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது. இதர கரும்புகள் ரூ.200 முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பூஜை பொருட்களும் அதிக அளவில் விற்பனையானது. வாழை இலைகளும் அதிக அளவில் விற்கப்பட்டது.
காய்கறி, பழங்கள், பூக்கள் வியாபாரமும் மிகுதியாகவே நடந்தன. அதேபோல வீட்டின் முன்பு திருஷ்டிக்காக தொங்க விடப்படும் ஆகாய கருடன் கிழங்கும் அதிகளவில் விற்பனை ஆனது. ரூ.50 முதல் எடைக்கேற்ப இந்த கிழங்குகள் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகளையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, பூந்தமல்லி, மாம்பலம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மண்பானைகள் விற்பனை நேற்று ஜோராக நடந்தது.
மேலும் நகரின் முக்கிய சாலைகளிலும் மண்பானைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.
Related Tags :
Next Story